நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை; யுவராஜ் சிங் வேதனை
2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை இரண்டிலும் யுவராஜ் சிங் பங்களிப்பில்லாமல் தோனி கோப்பையைத் தூக்கி இருக்க முடியாது, ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி போலவோ, கோலி போலவோ ஒரு அணியுடன் தன்னை நிலைபெறச் செய்து கொள்ள முடியவில்லை என்று யுவராஜ் சிங் லேசாக வருத்தப்பட்டார்.
பணமழை ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கலில் சுமார் 6 அணிகளில் ஆடியுள்ளார் யுவராஜ் சிங். 2016-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாது கோப்பையை வென்ற போது யுவராஜ் சிங் அந்த அணியில் ஆடினார், அதே போல் 2019 ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் வெல்லும் போது அணியில் யுவராஜ் இருந்தார்.
2014 ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக திகழ்ந்தார். கொல்கத்தா அணியுடன் நடந்த ஏலப்போட்டியில் ஆர்சிபி அணி ரூ.14 கோடிக்கு யுவராஜ் சிங்கை ஏலம் எடுத்தது.
இந்நிலையில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் 91வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற யுவராஜ் சிங் ஒரு அணி அல்லது 2 அணிகளில் மட்டும் செட்டில் ஆக முடியாதது பற்றி கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட ஐபிஎல் அணியுடன் நான் செட்டில் ஆக முடியாமல் போனதர்கான காரணத்தை என்னால் விளக்க முடியாது. ஒரு அணிக்கோ, அல்லது 2 அணிக்கோ மட்டுமே ஆடுமாறு எனக்கு அமையவில்லை.
நான் ஏறக்குறைய கொல்கத்தாவுக்கு ஆடியிருக்க வேண்டும், ஆனால் கடைசி நிமிடத்தில் ஆர்சிபி என்னை ஏலம் எடுத்தது. ஆர்சிபி அணியில்தான் என்னுடைய சிறந்த ஐபிஎல் சீசன் அமைந்தது என்பது ஒரு புறம் இருந்தாலும் கொல்கத்தாவுக்கு ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டமே” .
முதல் உலக டி20 கிரிக்கெட் தொடர் டி20 கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியது. 6 சிக்சர்கள் அடித்த தினம் என் தினமாக அமைந்தது. 5வது பந்து யார்க்கர் ஆனாலும் அதனை வெளியே அடிக்க என்னால் முடிந்தது ஏனெனில் அது என்னுடைய தினம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.