சென்னை டீம்ல தோனிய பாக்கவைக்க நான்பட்ட பாடு இருக்கே…! – தோனி பற்றி மனம் திறந்த அஸ்வின்
சென்னை அணியில் இருக்கையில் தோனியின் கவனத்தை ஈர்ப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் என மனம் திறந்து பேசியுள்ளார் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறுவது பெறுவதற்கு ஐபிஎல் தொடர் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. அஸ்வின் 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக ஆடினார்.
அதில் முதல் இரண்டு ஆண்டுகள் தோனிக்கு தன்னை பற்றி பெரிதும் தெரியவில்லை என்றும், அவரின் கவனத்தை ஈர்க்க மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நினைத்ததாக சென்னை அணியில் நடந்த அனுபவங்களை அண்மையில் நடந்த பேட்டியில் அஸ்வின் பகிர்ந்து கொண்டார் அஸ்வின்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு நேரலை மூலம் அஸ்வின் அளித்த பேட்டியில் கூறியதாவது:
” சென்னை அணியில் முதல் இரண்டு ஆண்டுகள் தோனிக்கு தன்னைப்பற்றி யார் என்று தெரியாமல் இருந்தது. அவரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால் பெரிய அளவில் செயல்பட வேண்டும் என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கான சரியான வாய்ப்பு வரும்வரை காத்துக் கொண்டிருந்தேன். 2010ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் அதற்கான வாய்ப்பாக அமைந்தது என உணர்கிறேன்.” என்றார்.
2010 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்றபோது அஸ்வின் முக்கிய பங்காற்றினார். அதேபோல் 2011 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்றபோது, அஸ்வின் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் இவரது சராசரி 19 மட்டுமே.
2010 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமான அஸ்வின் தற்போது வரை 71 டெஸ்ட் போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக ஆடிவந்த அஸ்வின், 2016-17 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக ஆடி வந்தார். 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில், 2020இல் யாரும் எதிர்பாராத நேரத்தில் டெல்லி அணிக்கு மாறுவதாக கூறிய அஸ்வின், சில சர்ச்சைகளுக்கும் ஆளானார்.