இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியிடம் இந்த ஒரு விஷயம் பிடிக்காது என கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர் கங்குலி என்றால் சற்றும் மிகையாகாது. இளம் வீரர்களை கொண்டு அணியை வரும்காலத்திற்கு சிறப்பாக கட்டமைத்தார். குறிப்பாக, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாஹீர்கான், தோனி ஆகியோர் இவர் தலைமையில் உருவானவர்கள்.
2002ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதும் கங்குலி தலைமையில் தான். மேலும், 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இந்திய அணியை எடுத்து சென்றார்.
ஆக்ரோஷமான கேப்டனாகவே பார்க்கப்பட்டார். இவரது காலகட்டத்தில் மற்றுமொரு ஆக்ரோஷமான கேப்டனாக இங்கிலாந்து அணியில் நாசர் ஹுசைன் பார்க்கப்பட்டார். கங்குலி மற்றும் நாசர் ஹுசைன் இருவரும், எவ்வாறு எதிரும் புதிருமாக? இருந்தோம் என்பது குறித்து நேர்காணலில் பலமுறை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் கங்குலி கேப்டனாக இருக்கையில் இந்த ஒரு காரியத்திற்க்காக அவருடன் ஆடவே பிடிக்காது என மனம் திறந்து பேசியுள்ளார் நாசன் ஹுசைன்.
அவர் கூறுகையில், “கங்குலியின் ஆக்ரோஷம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆடும் லெவனிலும் ஹர்பஜன் மற்றும் யுவராஜ் போன்ற ஆக்ரோஷமான வீரர்களை எடுத்திருப்பார். டாஸ் போடும் இடத்திற்கு உரிய நேரத்திற்கு வரவே மாட்டார். நான் நேரடியாக அவர் இருக்கும் இடத்திற்கு சென்று நேரமாகிவிட்டது என கூறிக்கொண்டே இருப்பேன். அப்போதும் வரமாட்டார். இதற்காகவே அவருடன் ஆடுவதற்கு பிடிக்காது.” என யாரும் இதுவரை அறியாத விஷயத்தை கூறியுள்ளார் நாசர் ஹுசைன்.