இது என்னோட இடம்… நம்ம எடத்துல வந்து நம்மகிட்டயே சீன் போட முடியுமா..? மிரட்டல் பந்துவீச்சு குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா !!

இது என்னோட இடம்… நம்ம எடத்துல வந்து நம்மகிட்டயே சீன் போட முடியுமா..? மிரட்டல் பந்துவீச்சு குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் தனக்கு அதிகம் பரீட்சயமான ஆடுகளமாக மாறிவிட்டதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரரான மிட்செல் மார்ஸ் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் வார்னர் – ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. டேவிட் வார்னர் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்தை (46) தனது மாயாஜால சுழலால் வெளியேற்றிய ஜடேஜா, லபுசேன் (27) மற்றும் அலெக்ஸ் கேரி (0) ஆகியோரையும் அடுத்தடுத்து வெளியேற்றி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரர்களின் மிக இலகுவாக கைப்பற்றிய ஜடேஜா, மற்ற பந்துவீச்சாளர்களின் வேலையை இலகுவாக்கினார். இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களும் தங்களது வேலையை சரியாக செய்து ஆஸ்திரேலிய அணி வெறும் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர். ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் பும்ராஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான இந்த போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் சேப்பாக்கம் ஆடுகளம் தனக்கு அதிக பரீட்சயமான ஆடுகளமாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜடேஜா பேசுகையில், “நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து எனக்கு நன்றாக தெரியும். இந்த ஆடுகளத்தை பார்த்த போதே நான் இந்த போட்டியில் 2 அல்லது 3 விக்கெட்டுகள் கைப்பற்றிவிடுவேன் என நம்பினேன். அதிர்ஷ்டவசமாக நான் நினைத்தது போன்றே 3 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டேன். சரியான லைனில் பந்துவீசுவது எனது கவனத்தை செலுத்தினேன், ஆடுகளமும் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்ததால், பந்து நேராக வருகிறதா இல்லை திசை மாறுகிறதா என்பதை கண்டறியவே முடியாது. பந்து நினைத்தது போன்றே சுழன்றதால் நான் பந்துவீசும் வேகத்தையும் சற்று அதிகப்படுத்தினேன்.சென்னை ரசிகர்களின் ஆதரவை குறையே சொல்ல முடியாது. மைதானம் முழுவதும் நிரம்பியுள்ளதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.