மற்றவர்களை விட சேவாக்தான் எனக்கு பேட்டிங் பற்றி அதிகம் கற்றுக் கொடுத்தார்: ஆஸி. பயிற்சியாளர் ட்ரெண்ட் உட்ஹில் புகழாரம்

ட்ரெண்ட் உட்ஹில் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம், அவர் சுமார் 10 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்தரப்பட்ட வீர்ர்களுடன் பணியாற்றி வருகிறார். இதில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, சேவாக், ஏ.பி.டிவில்லியர்ஸ், கெவின் பீட்டர்சன், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

இவர் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனக்கு பேட்டிங்கில் உத்தி என்பதில் நம்பிக்கையில்லை. இந்தியாவின் அழகே பலதரப்பட்ட பேட்ஸ்மென்கள் உருவாவதுதான். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் அனைத்து வீரர்களுக்குமான ஒரே ஒரு அணுகுமுறை பயிற்றுவிக்கப்படும். இதனால் நிறைய வீரர்கள் அங்கு பாழாய்ப்போனார்களே தவிர வளரவில்லை.

ஆஸ்திரேலியர்கள் தாங்கள் பார்த்துப் பழகாத எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஸ்டீவ் ஸ்மித் ஏன் சாதனையாளர் என்றால் யாரும் அவருடைய பேட்டிங்கில் தலையிட முடியாது. வார்னரும் அப்படித்தான். வலுவான கீழ் கை பிடிப்புடன் லெக் திசையில் வெளுத்து வாங்கிய மொகமட் அசாருதீன் ஆஸ்திரேலியாவில் இருந்திருந்தால் அங்கு அவர் ஆடியிருக்கவே முடியாது.

கிரேட் பேட்ஸ்மென்கள் சில விஷயங்களைச் சரியாகச் செய்வார்கள். பேலன்ஸ், பந்தை நன்றாகப் பார்ப்பது பந்தை கொஞ்சம் விட்டு தாமதமாக ஆடுவது என்பதை அவர்கள் சரியாகச் செய்தாலும் அவரவர் செய்யும் விதங்களில் வித்தியாசம் இருக்கும். தற்போது ரூட், வில்லியம்சன், கோலி, ஸ்மித் ஆகிய சிறந்த பேட்ஸ்மென்கள் ஆகியோர் வித்தியாசமானவர்கள் இவர்களிடத்தில் ரூட் அப்படியாடுகிறாரே, வில்லியம்சன் இப்படி ஆடினாரே அதே போல் ஆடு என்று கோலியிடமோ ஸ்மித்திடமோ கூறினால் வேலைக்கு ஆகாது.

விராட் கோலி நான் பணியாற்றியதிலேயே மிகவும் உடற்கூறு விஷயத்தில் ஃபிட் ஆன வீரர். அதனால்தான் அவர் சோம்பேறித்தனமான ஷாட்களை ஆட மாட்டார். ஏனெனில் அவரது உடல்நிலை, மற்றும் புத்தி மிகவும் கூர்மையானது. அதில்தான் அவரது அபாரம் அமைந்துள்ளது. அவரிடம் ஏகப்பட்ட திறமைகள் உள்ளன, அவர் ஸ்மார்ட் வீரர் கூட வெறும் கடின உழைப்பு மட்டும் கோலியை சிறப்பானவராக உருவாக்கவில்லை.

ஏ.பி.டிவில்லியர்ஸ் நான் பணியாற்றியதில் மிகவும் சாதுரியமான ஒரு வீரர். புத்திசாலி. கோலியும், டிவில்லியர்ஸும் முறையே கிரிக்கெட் உலகின் நடால், பெடரர் ஆவார்கள். டிவில்லியர்ஸும் பெடரரும் ஒரே டிஎன்ஏ உடையவர்கள் என்று நான் கருதுகிறேன். மற்றவர்கள் திணறும் சூழலில் கூட ஏ.பி.டிவில்லியர்ஸும் பெடரரும் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது.

கோலி, டிவில்லியர்ஸ், சேவாக் தனித்துவமானவர்கள் என்றாலும் சேவாக் அளவுக்கு எனக்கு பேட்டிங் பற்றி அதன் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தவர் யாரும் இல்லை என்றே கூற வேண்டும். கெவின் பீட்டர்சனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சேவாக் கால்களை நகர்த்தாதவர் என்று நாம் நினைக்கலாம், ஆனால் பந்திற்கு தனது வெய்ட்டை மாற்றுவதில் அவரை விடச்சிறந்த பேட்ஸ்மென்கள் இல்லை என்றே கூற வேண்டும். கட், இடுப்புக்கு வரும் பந்துகளை அரைபுல் அரை பிளிக் மற்றும் டிரைவ் ஆகியவற்றை கச்சிதமாக ஆடக்கூடியவர் சேவாக்.

குறைந்த நகர்வில் பந்துகளைச் சற்றே வரவிட்டு ஆடக்கூடியதில் வல்லவர். கால்நகர்த்தலைப் பெரிதாக சிலர் பேசுவார்கள், பந்துக்கு அருகில் கால்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள், ஆனால் சேவாக் அப்படியெல்லாம் செய்யாமலேயே கால்களை பந்துக்கு அருகில் கொண்டு சென்று அடிப்பது போலவே மிகவும் குறைந்த நகர்வில் ஷாட்களை ஆடக்கூடியவர். மாறாக நன்றாகக் கால்களை நகர்த்தினாலும் பந்தை அணுக முடிவதாக இருக்க வேண்டும், கால்களை நன்றாக நகர்த்தினாலும் பந்தை சந்திக்க முடியாதவர்களும் உண்டு. எனவே சேவாக் உத்தி இல்லாதவர் என்று கூறுவதற்கில்லை.

இவ்வாறு கூறினார் டிரெண்ட் உட்ஹில்

Editor:

This website uses cookies.