ரோ‘ஹிட்’ மேன் என்ற செல்லப்பெயர் பிடித்திருக்கிறது: தினேஷ் கார்த்திக்கிடம் ரோஹித் சர்மா

ஞாயிறன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் சதம் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட நாயகன் ரோஹித் சர்மா பிசிசிஐ.டிவிக்காக தினேஷ் கார்த்திக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அணியில் இடம்பெற்று ஆட வேண்டிய தினேஷ் கார்த்திக் இண்டெர்வியூ மேனாக மாற்றப்பட ரோஹித் ‘ஹிட்’ மேன் செல்லப்பெயர் குறித்து பதில் அளித்துள்ளார்! பிசிசிஐயின் கிளிஷேயான கேள்விகளுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில்கள் இதோ:

தொடரை வென்றதுதான் முதலில் முக்கியம். கடந்த போட்டியில் தோல்வி கண்டோம், எனவே கடைசி போட்டியில் எப்படி ஒரு அணியாக வெற்றியைச் சாதிப்பது என்பதுதான் என் மனதில் இருந்தது, சொந்த சாதனைகள் தானாக நடக்கும். நான் சொந்த சாதனைகள் பற்றி நினைக்கவேயில்லை என்பதுதான் உண்மை. நல்ல தொடக்கம் கண்ட பின்பே ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிப்பது என்பது பற்றியே யோசித்தேன். முக்கியமான ஆட்டம் என்பதால் வெற்றியைத் தவிர வேறு சிந்தனையில்லை.

அயர்லாந்துக்கு எதிரான 97 மற்றும் இந்த பிரிஸ்டல் சதம் வித்தியாசம் என்ன?

இந்தச் சதம் வேறு ஒரு சூழ்நிலையில் வந்தது, ஏனெனில் நாம் இலக்கைத் துரத்துகிறோம். செட் ஆன ஒரு பேட்ஸ்மென் கடைசி வரை நிற்க வேண்டும் என்பது பற்றி பேசியிருக்கிறோம். இந்த இன்னிங்ஸில் பொறுப்பு என்னுடையது, அன்று கே.எல்.ராகுல் அடித்த சதம் அழகான சதம். இந்த ஆட்டத்தில் என்னுடைய பொறுப்பு. அயர்லாந்தில் ஆடும்போது எவ்வளவு ரன்கள் முடியுமோ அவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான் ஏனெனில் நாம் முதலில் பேட் செய்தோம், அதனால் ஷாட்டுக்குச் சென்றேன் ஆட்டமிழந்தேன். அதில் சிறிது ஏமாற்றமடைந்தேன்.

3 டி20 சதங்களில் சிறப்பானது எது?

இதைக் கூறுவது கடினம் தினேஷ். உங்களுக்கே தெரியும் இந்த சதங்கள் எத்தனை முக்கியமானவை என்று. நான் 3 சதங்கள்தான் எடுத்துள்ளேன். நிறைய சதங்கள் அடித்திருந்தால் எது சிறந்தது என்று ஒன்றைத் தேர்வு செய்யலாம். முன்பு நான் அடித்த 3 ஒருநாள் இரட்டைச் சதங்களில் எது சிறந்தது என்று கேட்பார்கள். நான் எந்த ஒன்றையும் சிறப்பு என்று தேர்வு செய்யவில்லை, காரணம், மூன்றும் வெவ்வேறு சதங்கள். ஒவ்வொரு சதமுமே முக்கியம்தான்.

3 ஒருநாள் இரட்டைச்சதங்கள், 3 டி20 சதங்கள், செல்லப்பெயரான ஹிட்மேன் என்பதை மாற்றவும் வேண்டுமோ?

எனக்கு இந்த ஹிட்மேன் மிகவும் பிடித்திருக்கிறது. என் பெயருக்கும் பொருத்தமாகவே உள்ளது.

Editor:

This website uses cookies.