அட இது கூட நல்லா தான் இருக்கு; விராட் கோஹ்லி
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை போராடிய விதம் பெருமையாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வந்தது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் கடைசிவரை போராடிய இந்திய அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்தார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
போட்டிக்கு பின்னர் பேசிய விராத் கோலி, ‘இது சிறப்பான டெஸ்ட் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. பல முறை இந்தப் போட்டியில் நாங்கள் மீண்டு எங்கள் திறமையை காண்பித்தோம். ஆனால் இங்கிலாந்து அணியினர் எங்களிடம் இரக்கமின்றி செயல்பட்டனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடியிருக்கலாம். ஆனால் இந்தப் போட்டியில் எங்களின் போராட்டக்குணம் பெருமையாக இருக்கிறது. இந்த போட்டியிலிருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்வோம்.
பெரிய தொடரில் இது போன்ற ஒரு தொடக்கம் பெருமையானது. கீழ் வரிசை வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். உமேஷ், இஷாந்த் களத்தில் ஒட்டிக்கொண்டு நின்றனர். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக, இதுபோன்ற விஷயங்கள் கண்ணாடி போல காட்டுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் எனக்குப் பிடித்தமானது. சிறப்பானது’ என்றார்.