நான் அப்படித்தான் ஆடுவேன் ! விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா !
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்திய அணியின் சீனியர் பந்துவீச்சாளர்கள் பலர் காயமடைந்துள்ளதால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா தொடக்க வீரராக விளையாடிக் கொண்டிருக்கிறார். நான்காவது டெஸ்ட் போட்டியின் போது நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்.
குறிப்பாக நான்காவது டெஸ்டில் அதிரடியாக விளையாடி 44 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் இப்படி ஆட்டமிழப்பது இது முதல்முறையல்ல. கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போதும் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெரிய ஷாட்டிற்கு முயன்றுவிக்கெட்டை பறிகொடுத்தார். 2016-17ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னரின் பந்தில் பெரிய ஷாட் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார்.
12 முறை ஸ்பின்னர்களுக்கு எதிராக கேட்ச் முறையில் பெவிலியன் திரும்பியுள்ளார். அதில் 6 முறை பெரிய ஷாட்களை தேர்வு செய்ததால் ஆட்டமிழந்தார். இந்நிலையில் ரோகித் சர்மா இப்படி தொடர்ந்து தேவையில்லாமல் தனது விக்கெட்டை இறப்பதற்கு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக சுனில் கவாஸ்கர் இப்படி ஆடக் கூடாது என்று காட்டமாக பேசினார். இதுகுறித்து பேசியுள்ள ரோகித் சர்மா அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில் “நான் எனக்கு தெரிந்த வகையில் மிகச் சரியாகத்தான் முயற்சி செய்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி அது நடக்கவில்லை. இதற்காக நான் வருத்தமெல்லாம் படமாட்டேன். அதிரடியாக ஆடுவதை என்னுடைய ஸ்டைல். பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். இதுவே எனது வேலை. அதிக ரன் அடிக்க வேண்டுமென்றால் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கும் தள்ளவேண்டும். யாராவது ஒருவர் இந்த முயற்சியை செய்தே ஆக வேண்டும். அதனை நான் செய்தேன். சில நேரங்களில் தவறு ஏற்படலாம். அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் ரோகித் சர்மா.