தெரிந்தே தான் தல தோனியை தாக்கினேன்; ஒப்புக்கொண்ட சோயிப் அக்தர்
2006ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தவறு என தெரிந்தே தான் தோனியை நோக்கி பீமர் பந்துகளை வீசியதை தற்பொழுது சோயிப் அக்தர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக உலகமும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளதை போன்று, சில நாட்டு கிரிக்கெட் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.
வீட்டிலேயே முடங்கியுள்ளதால் டைம் பாஸிற்கு சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து உரையாடுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், தனக்காக தனி ஒரு யூடியூப் சேனைலையே உருவாக்கி கொண்டு அதில் தினம் தினம் எதாவது ஒரு விசயம் குறித்தும், தனது கிரிக்கெட் அனுபவம் குறித்தும் பேசி வருகிறார்.
இந்தநிலையில், சமீபத்தில் அக்தர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தோனிக்கு பீமர் பந்துகள் வீசியது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அக்தர் பேசியதாவது;
2006ம் ஆண்டு பைசலாாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 9 ஓவர்கள் பந்துவீசி வந்தேன். அப்போது அந்த இன்னிங்ஸில் தோனி சதம் அடித்தார். “தோனி சதம் அடித்து முடித்தவுடன். நான் அவரை குறிவைத்தே பீமரை வீசினேன். பின்பு அதற்காக தோனியிடம் மன்னிப்பும் கேட்டேன். அப்போதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பேட்ஸ்மேனுக்கு வேண்டுமென்றே பீமரை வீசினேன். அதை நான் செய்திருக்கக் கூடாது. அதற்காக பிறகு நான் மிகவும் வருந்தினேன். அன்றையப் போட்டியில் நான் எப்படிப் போட்டாலும் தோனி அடித்துக்கொண்டே இருந்தார். அதனால் நான் கொஞ்சம் வெறுப்படைந்தேன்” என மனம் திறந்துள்ளார் ஷோயப் அக்தர்.
சோயிப் அக்தர் குறிப்பிட்டுள்ள இந்த போட்டியில் தோனி 148 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.