நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இவரை போன்று விளையாட நினைத்தேன். ஆனால் அது முடியாது என பின்னர் தெரிந்து விட்டது என்று தனது சமீபத்திய பேட்டியில் மகேந்திர சிங் தோனி தெரிவித்திருக்கிறார். மேலும் பள்ளி பருவத்தில் உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் எது என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்தது ஏராளம். தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணிக்கு கிட்டத்தட்ட 13 வருடங்கள் கேப்டன் பொறுப்பேற்று விளையாடியுள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டனாகவும் அவர் இருக்கிறார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்திருக்கிறார். அதேபோல் முதல் டி20 உலக கோப்பையையும் பெற்று புதிய வரலாறு படைத்திருக்கிறார். இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டன்களில் முதன்மையானவராக இருக்கும் இவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அத்துடன் இந்தியாவில் ஏராளமான பகுதிகளிலும் இவருக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் இருக்கின்றனர். பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் இவரை பார்த்து வியப்படையும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை புரிந்து இருக்கிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவ்வப்போது நிகழ்ச்சிகளுக்காக சென்னை வரும் மகேந்திர சிங் தோனி, பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் வினவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இம்முறை சென்னை வந்த அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி ஓசூரில் புதிய கிரிக்கெட் அகாடமி ஒன்றை திறந்து இருக்கிறது. அதற்கு ‘தோனி கிரிக்கெட் அகாடமி’ எனவும் பெயரிட்டு இருக்கிறது. அதில் கிரிக்கெட் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். சிறிது உரையாற்றிய தோனி குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அப்போது, “உங்களது கிரிக்கெட் ரோல் மாடல் யார்?” என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தோனி, “எனது கிரிக்கெட் ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கர். அவரை பார்த்து, நான் அதேபோல விளையாட வேண்டும் என்று நினைத்தேன். பின்னர் எனக்கு தெரிந்து விட்டது. அவரைப் போல என்னால் விளையாட முடியாது என்று. ஆகையால் அதை கைவிட்டு விட்டேன். ஆனால் இன்றளவும் அந்த ஏக்கம் எனக்குள் இருக்கிறது.” என்றார்.
அடுத்ததாக, “பள்ளி பருவத்தில் உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் எது?” என கேட்டபோது, “ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்ட்டில் வருகிறதா?.” என பதில் கேள்வி எழுப்பி கலகலப்பை உண்டாக்கினார்.