இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் இது போன்ற தவறுகளை சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் கங்குலி.
இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி முறையே 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மார்ச் 1ஆம் தேதி இந்தூர் மைதானத்திலும், மார்ச் 9ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் நடக்கிறது. இரண்டையும் வென்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றுவதற்கு இந்திய அணியினர் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.
அதேநேரம் ஆஸ்திரேலியா அணியில் முன்னணி வீரர்கள் தொடர்ந்து காயம் காரணமாகவும் சொந்த காரணங்களுக்காகவும் நாடு திரும்பி உள்ளனர். இது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை தந்திருந்தாலும், 3வது டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார். இது பலத்தை கொடுக்கலாம்.
இதற்கிடையில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். ஆனால் அப்படியொரு வெற்றியைப் பெற சில தவறுகளை சரி செய்ய வேண்டியது இருக்கிறது என்று சுட்டிக்காட்டி அறிவுரை கூறியுள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி. அவர் கூறியதாவது:
“இந்திய அணி தலைசிறந்த அணி ஆஸ்திரேலியா அணியால் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெறுவது கடினம். ஆனாலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சில அதிர்ஷ்டம் இருந்தது என்றே கூறுவேன்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முற்றிலுமாக சொதப்பினர். ரோகித் சர்மா நன்றாக விளையாடினார். ஆனால் மத்த பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறும்பொழுது ஆஸ்திரேலியா அணி வலுவான நிலைக்கு சென்றது அந்த சமயத்தில் கீழ் வரிசையில் இறங்கும் வீரர்கள், குறிப்பாக ஆல்ரவுண்டர்கள், கடினமான மனநிலையுடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இவர்களது விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியிருந்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை கொடுத்திருக்கும். இந்த தவறை கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வீரர்கள் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும். கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்.” என்றார்.