நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி தனது வெற்றியை பதிவிட்டது, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
அந்தப் போட்டியின் எதிர்பாராத விதமாக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனும் மற்றும் இந்திய அணி பேட்ஸ்மேனுமான ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ பவுண்டரி லைனை நோக்கி பந்தை அடித்தார். அந்த பந்தை தடுக்க முயன்ற ஸ்ரேயஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த ஸ்ரேயஸ் ஐயரை சக வீரர்கள் பெவிலியனுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இவர் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கு பெற மாட்டார் என்றும் அதனைத் தொடர்ந்து நடக்கின்ற ஐபிஎல் போட்டிகளில் இவர் பங்கெடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, உங்களுடைய அனைவரின் செய்தியையும் படித்தேன் உங்களுடைய அன்பும் ஆதரவும் என்னை மிகவும் சந்தோஷம் அடைய வைத்தது, மேலும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், நிச்சயம் மிக சிறப்பாக கூடிய விரைவில் மீண்டும் வருவேன் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக திகழும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அந்த அணி தனது கேப்டனை இழந்து கவலையில் உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை யார் பூர்த்தி செய்வார் என்ற குழப்பத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது, இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாத டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிகப்பெரும் பின்னடைவை சந்திக்க கூடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.