ஒரு சீசன வச்சு முடிவு பண்ணாதீங்க.. என்னோட வானவெடிக்கையை இனிமேல் தான் ஆரம்பிக்கவே போறேன் – பேபி ஏபி டி வில்லியர்ஸ் நம்பிக்கை!

வருகிற சீசனில் என்னுடைய பேட்டிங்கை பலரும் தெரிந்து கொள்வார்கள் என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார் டெவால் பிரேவிஸ்.

அண்டர் 19 உலக கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி பலரையும் கவர்ந்த தென்னாபிரிக்க இளம் வீரர் டெவால் பிரேவிஸ் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில், மும்பை அணிக்கு எடுக்கப்பட்டார். தொடர்ச்சியாக பல போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட்டார்.

ஏபி டி வில்லியர்ஸ் போன்று மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் ஷார்ட்டுகளை அடிப்பதால் இவருக்கு பேபி ஏபிடி என்ற செல்லப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டிகளில் 57 பந்துகளில் 162 ரன்கள் விளாசி பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த இவரை, தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் மும்பை அணி நிர்வாகம் வாங்கியுள்ள எம்ஐ கேப்டவுன் அணிக்கு எடுத்துள்ளது.

இந்நிலையில் அந்த அணிக்காக விளையாடுவது பற்றி தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசிய டெவால் பிரேவிஸ் கூறுகையில், “என்னுடைய கனவு தற்போது நினைவாக இருக்கிறது. மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்பது என் சிறு வயதிலிருந்து கனவாக இருந்தது. ஆனால் தற்போது கனவு இரண்டு முறை நனவாகி இருப்பதை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்காக விளையாட உள்ளேன். இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் எனது சொந்த நாட்டின் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்.” என்றார்.

“புதிதாக அறிமுகமாகும் இந்த டி20 லீக் தொடர் மிகச் சிறப்பாக இருக்கப் போகிறது. பல நாட்டிலிருந்தும் கிரிக்கெட் வீரர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு வருகிறார்கள். இங்கு கிரிக்கெட் பாரம்பரியம் எப்படி இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொள்வார்கள். அதேபோல் இங்கே இருக்கும் ரசிகர்கள் கிரிக்கெட்டை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

புதிதாக இங்கே வருபவர்கள் பல வானவேடிக்கைகள், பவுண்டரிகள், விக்கெட்டுகள் என அனைத்திற்கும் தயாராக வர வேண்டும். வரும் சீசனில் நான் எனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். என்னிடமிருந்து வானவேடிக்கைகள் எதிர்பார்க்கலாம். அதன் மூலம் ரசிகர்களையும் மகிழ்விப்பேன்.” என நம்புகிறேன் என்றார்.

Mohamed:

This website uses cookies.