“நாயகன் மீண்டும் வரான்” தென்னாபிரிக்கா தொடரை வெல்ல இவர் தான் உதவுவார் – சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து!

தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விராட் கோலியின் ஆட்டத்தை கவனிக்க வேண்டும் என்று பேட்டியளித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்ற பிறகு, தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி துவங்குகிறது. திருவனந்தபுரத்தில் துவங்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா ஓய்வளிக்கப்பட்டிருக்கிறார்.

தீபக் ஹூடா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். புவனேஸ்வர் குமாரும் தனது சிறந்த பார்மில் இல்லை என்பதால் வெளியில் அமர்த்தப்படலாம். ஹர்ஷல் பட்டேல் நிச்சயம் வெளியில் அமர்த்தப்பட்டு அர்சதீப் சிங் உள்ளே எடுத்து வரப்படலாம். பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட இருக்கிறது.

இதற்கு இடையில் பேட்டிங்கில் விராட் கோலி மிக முக்கியமான வீரராக திகழ்வார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் இரண்டிலும் மெல்ல மெல்ல தனது பழைய பார்மிற்கு விராட் கோலி திரும்பி உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு விராட் கோலி எப்படி இருந்தாரோ! மீண்டும் அதே போன்று திரும்பி வந்திருக்கிறார் என விராட் கோலியின் புகழை பாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர். அவர் கூறுகையில்,

“இரண்டு வருடத்திற்கு முன்பு விராட் கோலியின் ஆட்டம் எப்படி இருந்ததோ! மீண்டும் அதே போன்று ஒரு ஆட்டத்திற்கு அவர் திரும்பி இருக்கிறார். இரண்டு வருடங்களாக அவரது ஆட்டத்தில் பவர் இல்லை. அது ஒன்றுதான் குறைபாடாக இருந்தது. சமீப காலமாக அவரது ஆட்டம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சேசிங்கில் விராட் கோலி விளையாடும் விதத்தை வைத்து தான் அவர் எந்த அளவிற்கு ஃபார்மில் இருக்கிறார் என்பதை உணர முடியும். மீண்டும் தனது பழைய பார்மிற்கு அவர் வந்திருப்பது டி20 உலக கோப்பைக்கு ஆரோக்கியமானதாக தெரிகிறது.

தென்னாபிரிக்கா தொடரில் விராட் கோலி விளையாடும் விதத்தை கவனிக்க வேண்டும். ஏனெனில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இத்தொடர் இருப்பதால், இதே மனநிலை டி20 உலக கோப்பை தொடரிலும் வெளிப்படும். ஆசிய கோப்பை தொடரிலிருந்து விராட் கோலியின் ஆட்டத்தில் நல்ல கான்பிடன்ஸ் மற்றும் ரன் குவிப்பின் பசி இரண்டும் தெரிகிறது.” எனவும் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.