“இந்திய அணியில் இப்படி ஒரு வீரர் இல்லாமல் ரோகித் சர்மா தவித்து வருகிறார். அவர் மட்டும் அணிக்கு விரைவாக வந்துவிட்டால், நிச்சயம் இந்தியாவிற்கு உலகக்கோப்பை பெற்றுக் கொடுத்து விடுவார் ரோகித் சர்மா.” என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப்.
உலகக்கோப்பைத் தொடர் இந்த வருடம் இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.
2011ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. அதுவும் இந்திய மண்ணில் நடந்த போது வென்றது. மீண்டும் இப்போது இந்தியாவில் நடைபெறுகிறது. ஆகையால் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறது.
இந்திய அணிக்கு தற்போது கவலையை தரும் விஷயம் எல்லாம் சீனியர் வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது தான். கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் தொடர்ந்து காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். துடிப்பான இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தபின் தற்போது மெல்ல மெல்ல தெறிவருகிறார். இவர் உலகக்கோப்பைக்குள் வந்துவிடுவார் என்பது சந்தேகம் தான்.
இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பையை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ரோகித் சர்மாவிற்கு பும்ரா போன்ற பவுலர் இல்லாதது மிகப்பெரிய குறையாகவே தெரிகிறது என்கிற கருத்துக்களை முன்வைத்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப்.
“இந்திய அணி தனது சொந்த மண்ணில் உலகக்கோப்பையை விளையாடுகிறது. மைதானத்தின் கண்டிஷன்களை நன்கு உணர்ந்தவர்கள் நாம். பவுலிங் நமக்கு நன்றாகவே உள்ளது. ஸ்பின்னர்கள் போட்டியில் திருப்புமுனையாக இருப்பார்கள். போட்டியை தனியாளாக நின்று வெல்லும் அளவிற்க்கு வீரர்கள் நம்மிடம் உண்டு.”
“இந்திய அணிக்கு தற்போது இருக்கும் கவலை எல்லாம் வீரர்களின் உடல்நிலை. முன்னணி வீரர்கள் சிலர் காயம் காரணமாக விளையாட முடியாமல் இருக்கின்றனர். பந்துவீச்சு சற்று நம்பிக்கையை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சரி வர விளையாடுவதில்லை. விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் அணியில் இருந்த போதிலும் மற்ற சீனியர் வீரர்கள் போதிய பங்களிப்பை கொடுக்கவில்லை. இதன் காரணமாக பேட்டிங்கில் இந்திய அணி தடுமாறி வருகிறது. விரைவாக முன்னணி வீரர்கள் குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும்.
ரோகித் சர்மா தன்னுடைய சில வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் பும்ரா இருக்கிறார். அவர் இல்லாதது ரோகித் சர்மாவிற்கு சற்று பின்னடைவாகவே இருப்பதால் முடிவுகளில் தடுமாறுகிறார் என்று தோன்றுகிறது.” என முகமது கைப் கூறினார்.