முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் இந்திய இளம் பந்துவீச்சாளர்
தற்பொழுது உள்ள இந்திய பந்துவீச்சாளர்களில் மிக அற்புதமாக யார்க்கர் பந்து வீசுவது புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே. ஆனால் இவர்கள் இருவருக்குமே சவால் விடும் வகையில் சமீபகாலமாக பந்து வீசி வருகிறார் இளம் பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன்.
ஐபிஎல் தொடரில் சென்ற ஆண்டு ஹைதராபாத் அணி யில் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணிக்கு உள்நுழைந்து, ஒட்டுமொத்த இந்தியர்களையும் தன் கவனத்திற்கு கொண்டு வந்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் களமிறங்கி அனைவரையும் தனது பந்து வீச்சின் மூலம் ஆச்சரியப்படுத்தினார்.
ஆனால் எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியதாக போனது.
தங்கராசு நடராஜனுக்கு நடந்து முடிந்த அறுவை சிகிச்சை
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த தங்கராசு நடராஜன் எதிர்பாராத விதமாக தனது முழங்காலில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் குழு நிச்சயமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியதை அடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் கடந்த மாதம் 27ம் தேதி அவருக்கு நன்றாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
தங்கராசு நடராஜன் தனக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததை ஒரு புகைப்படம் மூலம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். எனக்காக வேண்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி என்றும் அறுவை சிகிச்சை மிக சிறப்பாக நடத்தி குடுத்ததற்கு மருத்துவ குழுவிற்கு நன்றி என்றும் கூறினார். மேலும் இவற்றை நல்ல வழியில் தனக்கு அமைத்துக் கொடுத்த பிசிசிஐ கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு நாளும் புதிதாக எழுகிறேன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கராசு நடராஜன் தனது இன்ஸ்டகிரம் வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவது போல் தங்கராசு நடராஜன் செயல் பட்டிருந்தார். மேலும் அந்த வீடியோவுக்கு கீழ் தங்கராசு நடராஜன், நான் ஒவ்வொரு நாளும் முன்பை விட புதிதாக எழுகிறேன்.
முன்பைவிட என்னை நான் பலப்படுத்திக் கொண்டு, மீண்டும் அதே உத்வேகத்துடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டு வருகிறேன் என்றும் கூறியிருந்தார். கூடிய விரைவில் நான் முழுமையாக குணமாகி இந்திய அணிக்காக நிச்சயமாக விளையாடுவேன் என்றும் கூறியிருந்தார். தங்கராசு நடராஜனும் மீண்டும் பழையபடி வந்து வந்து வீச வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்திய ரசிகர்களும் ஆசையாகும். இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் தங்கராசு நடராஜனின் பார்ம் இந்திய அணிக்கு நிச்சயமாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.