உலகக்கோப்பைத் தயாரிப்பில் ஆஸ்திரேலியா அணி தன் பங்கைச் சரியாக செய்துள்ளது, நேற்று இலங்கை அணியை பயிற்சி ஆட்டத்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உஸ்மான் கவாஜா 105 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இப்போது ஆஸி. அணி பெறும் வெற்றியெல்லாம் வெறும் ஃபுளூக் அல்ல என்று கூறும் கவாஜா, “திரைக்குப் பின்னால் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த மட்டத்தில் போட்டிபோட அந்த அளவு உழைப்பு தேவை.
அனைவரும் நிறைய முயற்சிகளை எடுக்கிறோம். இந்தியாவிடம் ஆஸ்திரேலியாவில் தோற்றாலும் எங்களைப் பொறுத்தவரை அது திருப்பு முனைதான். இந்திய அணி மிகச்சிறந்த அணி அவர்களுக்கு சில கடினமான தருணங்களை அளித்தோம், ஆனால் மீண்டும் இந்தியாவுக்கு வந்த போது முதல் 2 போட்டியில் தோற்றோம் பிறகு தொடரை 3-2 என்று வெற்றி பெற்றோம். இப்படி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு.
வெற்றி பெறுவது என்பது ஒரு பழக்கம், இந்த உணர்வை தொடர விரும்புகிறோம். நாங்கள் இதற்கு முன்பாகத் தோற்றிருக்கலாம் ஆனால் வெற்றிப் பழக்கத்தை மீண்டும் எங்கள் அணி கண்டுபிடித்துக் கொண்டது.
தோற்றால் என்ன மாதிரியான உணர்வு இருக்கும் வெற்றி பெற்றால் உணர்வு என்ன மாதிரியாக இருக்கும் என்ற வித்தியாசம் தெரியும் போது நமக்கு எந்த உணர்வு தேவை என்பது நன்றாகத் தெரியும்.
பயிற்சி ஆட்டங்களில் வென்றோம், இப்போது இதே வெற்றி தொடக்கத்தை உலகக்கோப்பையிலும் தொடர வேண்டும். தொடக்க ஆட்டக்காரராக இறங்குவது என்பது 3 ம் நிலையைக் காட்டிலும் வித்தியாசமானது. 3ம் நிலையே 5ம் நிலையிலிருந்து வேறுபட்டது.
எனக்கு தொடக்கத்தில் இறங்குவது பிடிக்கும், ஒருநாள் கிரிக்கெட்டில் வாழ்க்கை முழுதும் அந்த நிலையில்தான் ஆடியுள்ளேன். ஆனால் இப்போது வெற்றி முக்கியம் டவுன் ஆர்டர் முக்கியமல்ல, நான் டக் அடித்தாலும் அணி வெல்வதைத்தான் விரும்புகிறேன், மாறாக நான் சதம் அடித்து அணி தோற்றால் அது விரும்பத்தக்கதல்ல” என்றார் உஸ்மான் கவாஜா.