டி20 உலக கோப்பையின் போது இந்திய அணியின் சுழல் பந்துவீச்சில் நிச்சயம் கவனம் தேவை. அவர்கள் தான் திருப்புமுனையாக இருப்பார்கள் என்று அறிவுறுத்தியுள்ளார் சஞ்சய் மஞ்ரேகர்.
டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேறு எதைப் பற்றியும் பேசாமல் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் குறித்த பேச்சுக்கள் மட்டுமே அடிபட்டு வருகின்றன. குறிப்பாக பந்துவீச்சு சற்று கவலைக்கிடமாக இருக்கிறது எனும் கருத்துக்களை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
அதற்கு ஏற்றார்போல, ஆசிய கோப்பையிலும், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் பந்துவீச்சு கேள்விக்கு உள்ளாக்கக்கூடியதாக இருக்கிறது. பலரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை குறைகூறி வரும் நிலையில், வித்தியாசமாக இந்திய அணியின் சுழல்பந்துவீச்சு பற்றி பேசியுள்ளார் வர்ணனையாளரும் முன்னாள் இந்திய வீரருமான சஞ்சய் மஞ்ரேக்கர். அவர் கூறுகையில்,
“ஆசியக் கோப்பை தொடரிலும் யுஸி., சகல் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவர்களுக்கு 42/1 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டாவது போட்டியில் ஒரு ஓவர் வீசி 12/0 ரன்கள் விட்டுக் கொடுத்தார். நல்ல அனுபவம் மிக்க வீரர் செயல்பாட்டில் சறுக்கல் வரும் பொழுது இந்திய அணி திணறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 தொடருக்கு இன்னும் சில காலமே உள்ளதால், சஹாலுக்கு சில போட்டிகளில் ஓய்வு கொடுத்து நல்ல மனநிலையை கொண்டுவருவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா மைதானம் வேகப்பந்து வீச்சிருக்கு சாதகமாக இருந்தாலும், திருப்புமுனையாக அமையப்போவது சுழல் பந்துவீச்சு தான். ஆகையால் நான் சுழல் பந்துவீச்சு மீது தற்போது கவனம் செலுத்தி இருக்கிறேன்.
மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது எந்த அளவிற்கு முக்கியம் என்று பலருக்கும் தெரியும். அதை சுழல் பந்துவீச்சாளர்கள் தான் செய்ய முடியும். அக்சர் பட்டேல், அஸ்வின், சகல் 3 பேரும் அணியில் இருக்கின்றனர். மூவருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது. ஆகையால் மிடில் ஓவர்களில் ஏதேனும் டிராமா நடந்து விடக்கூடாது. அது இந்திய அணிக்கு தவறாக முடிந்து விடும். ஆஸ்திரேலியா மைதானம் சகலுக்கு நிறைய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. ஆகையால் அவர் மீண்டும் பார்மிற்கு வருவது மிகவும் முக்கியம்.” என சஞ்சய் மஞ்ரேக்கர் பேசினார்.