தெரியாம கேக்குறேன்.. ஒழுங்கா ஆடாதவனுக்கு இவ்ளோ வாய்ப்பு கொடுக்குறீங்க.. இந்த பையன் வருஷா வருஷம் பின்றான், இவனுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்க – சிஎஸ்கே வீரருக்கு ஆதரவு கொடுத்த சேவாக்!

சிஎஸ்கே அணியின் ருத்துராஜ் ஒவ்வொரு சீசனிலும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஓப்பனிங்கில் செயல்பட்டு வருகிறார். இவருக்கு இந்திய அணியில் ஏன் இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுக்கவில்லை? என்று ஆதரவாக பேசியுள்ளார் முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவாக்.

சிஎஸ்கே அணியின் முன்னணி துவக்க வீரராக இருந்து வரும் ருத்துராஜ் கெய்க்வாட், 2019 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். 2020 ஐபிஎல் சீசனின் கடைசி கட்டத்தில் தான் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 208 ரன்கள் குவித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2021 ஐபிஎல் சீசனில் முழுவதும் ஓபனிங் இறங்கவைக்கப்பட்டார். 16 போட்டிகளில் 1 சதம் மற்றும் 4 அரைசதங்கள் என 635 ரன்கள் குவித்து, ஆரஞ்சு தொப்பியையும் பெற்று அசத்தினார். 2022 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு சரியாக அமையவில்லை என்றாலும், ருத்துராஜ் 14 போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 368 ரன்கள் அடித்தார்.

கடந்த சையது முஸ்தக் அலி டி 20 தொடரில், 6 போட்டிகளில் 295 ரன்கள் குவித்தார். விஜய் ஹசாரே தொடரிலும் ஐந்து சதங்கள் அடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். 2023 ஐபிஎல் சீசன் தற்போது துவங்கியுள்ளது. முதல் போட்டியில் 92 ரன்கள் அடித்து சிஎஸ்கே அணியின் ஒற்றை நம்பிக்கையாக திகழ்ந்தார் ருத்துராஜ்.

 

இந்திய அணியில் 9 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டி என, இதுவரை 10 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் ஒரு அரைசதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி வருகிறார். இவரைப் போன்ற வீரருக்கு சரியாக வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது என்று ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் முன்னாள் அதிரடி துவக்க விரர் விரேந்திர சேவாக்.

“ருத்துராஜ் அரைசதம் மட்டும் அடித்துவிடவில்லை. அதை சதமாக மாற்றும் அளவிற்கு திறமை படைத்தவராக இருக்கிறார். இரண்டு சீசன்களாக சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்க வீரராக இருந்திருக்கிறார். இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக உடனடியாக தூக்கிவிடலாம் என்றால், இந்தியாவில் இப்போது பல ஜாம்பவான்கள் இருந்திருக்க முடியாது. சரியாக ஆடாத வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்கிறீர்கள். அதையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் மோசமாக விளையாடி வருகிறார்கள்.

ஆனால் ஏன் ருத்துராஜ்-க்கு ஒருசில போட்டிகள் தவிர்த்து, நிறைய வாய்ப்புகள் கொடுக்கவில்லை. விரைவில் அவரை இந்திய அணியில் எடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த சீசனில் நிறைய ரன்கள் அடித்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாகவும் இவர் தெரிகிறார்.” என்று சேவாக் கூறினார்.

Mohamed:

This website uses cookies.