ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்ததற்கு இது தான் காரணம்; ஜாஸ் பட்லர் ஓபன் டாக்
ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் சரிவு கண்டு 170/3 என்பதிலிருந்து 226/8 என்று ஆனது, ஆனால் அதன் பிறகு பட்லர் இறங்கி 98 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 70 ரன்களை எடுத்து 2ம் நாளான வெள்ளிக்கிழமையன்று கமின்ஸ் பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.
3 சிக்சர்களையும் அவர் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் அடித்தார், மூன்றுமே ஒருநாள் போட்டிகளில் ஆடுவது போன்ற ஷாட்களாகும்.
கடைசி விக்கெட்டாக ஜாக் லீச்சும் மார்ஷ் பந்தில் பவுல்டு ஆகி மார்ஷின் முதல் டெஸ்ட் 5 விக்கெட்டுகளுக்கு வழிவகை செய்தார், இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 300 எடுக்க முடியாமல் 294 ரன்களுக்குச் சுருண்டது.
இந்நிலையில் தன் இன்னிங்ஸ் பற்றி பட்லர் கூறியதாவது:
பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி. காலையில் நன்றாக ஆடினோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த அடித்தளத்தை அதிக ஸ்கோராக மாற்ற முடியவில்லை.
ஆஸ்திரேலிய அணி உண்மையில் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணி, நாள் முழுதும் நம்மை அவர்கள் கடுமையாக திணறடிக்கின்றனர். நல்ல நிலையிலிருந்து நல்ல ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது வெறுப்பேற்றுகிறது.
புதிய பந்து எடுப்பதற்கு முன்பாக சிலபல ஷாட்களை ஆட முடிவெடுத்தேன். எனக்கும் கொஞ்சம் அப்படி ஆடுவது பிடித்திருந்தது, காரணம் இந்தத் தொடரில் பேட்டிங் என்பது கடின உழைப்பாக இருக்கிறது, மகிழ்ச்சிகரமாக இல்லை. எனவே தடைகளை உடைத்து என் முகத்தில் புன்னகை அரும்ப ஆட முடிவெடுத்தேன்” என்றார்.