இந்தியா கூட என்னால் விளையாட முடியாம போச்சே… கவலையில் குசால் மெண்டிஸ்
இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற முடியாததற்கு முந்தைய தொடர்களில் தன்னுடைய மோசமான பேட்டிங் காரணம் என்று இலங்கை அணியின் இளம் வீரர் குஷல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணி, வழக்கம் போல் ஒருநாள், டி.20 மற்றும் டெஸ்ட் என அனைத்து தொடரையும் இழந்து வெறும் கையுடன் நாட்டிற்கு திரும்பியது.
இந்த தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறாத இலங்கை அணியின் இளம் வீரர் குஷால் மெண்டிஸ், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உடனான முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
அணிக்கு மீண்டும் திரும்பியுள்த்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குசால் மெண்டிஸ், அதே வேளையில் இந்திய அணியுடனான தொடரில் விளையாட முடியாமல் போனது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த பேசிய குசால் மெண்டிஸ் “வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உடனான முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் கிரிக்கெட் உலகின் தற்போதைய சிறந்த அணியான இந்தியாவிற்கு எதிராக தொடரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான தொடரில் நான் இடம்பெறாததற்கு நானே காரணம. அதற்கு முன்னதாக நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டு கொஞ்சம் ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தனக்கு கிடைத்து பயிற்சியாளர் தன்னை சிறந்த முறையில் உருவாக்கி வருவதாகவும், அவரது அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் தனக்கு புதிய உத்வேகத்தை கொடுப்பதாகவும் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இளம் வீரரான தன்னிடம் மூத்த வீரர்கள் உள்பட அனைவரும் தன்னுடன் எந்த ஆணவமும் இல்லாமல் சரிக்கு சமமாக பழகுவதாகவும், தன்னுடையை எதிர்காலத்திலும் அவர்கள் காட்டும் அக்கறையும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் குசால் மெண்டிஸ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.