இது உங்களுக்கு தேவையா.. வெளிநாட்டு கேப்டன்களை நம்பி அனுபவிச்சது போதாதா? – மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு சன்ரைசர்ஸ் அணியை சாடிய இர்பான் பதான்!

இரண்டு சிறந்த இந்திய வீரர்கள் இருக்கும்பொழுது அவர்களுக்குத்தான் கேப்டன் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார் இர்பான் பதான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வந்த கேன் வில்லியம்சன் கடந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பு இரண்டிலும் செயல்படவில்லை. சீசனின் கடைசி சில போட்டிகளில் அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளது என்ற காரணத்திற்காக சொந்த ஊருக்கு திரும்பினார்.

மேலும் வில்லியம்சன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் இடையே பனிப்போர் நிலவி வந்திருக்கிறது. ஆகையால் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து கேன் வில்லியம்சன் ரிலீஸ் செய்யப்பட்டார்.

ஐபிஎல் ஏலத்தில் மயங்க் அகர்வால் உள்ளிட்ட சில வீரர்களை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் எடுத்தது. மேலும் கேன் வில்லியம்சன் இல்லாத போது கடந்த சீசனில் ஒரு சில போட்டிகளில் புவனேஸ்வர் குமார் கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். மயங்க் அகர்வால் ஏற்கனவே ஒரு அணிக்கு கேப்டனாகவும் இருந்தவர்.

மயங்க் அகர்வால், புவனேஸ்வர் குமார் இருவரில் ஒருவரை கேப்டனாக சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதற்கு இடையில் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் தென்னாப்பிரிக்கா டி20 லீகில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கியது. அந்த அணிக்கு மார்கரம் எடுக்கப்பட்டு கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, முதல் சீசனில் கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார்.

மார்க்ரம் மீது நம்பிக்கை கொண்ட சன்ரைசர்ஸ் நிர்வாகம் ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அறிவித்தது. இதற்கு சில வரவேற்புகளும் சில விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வீரர் ஒருவரை கேப்டனாக நியமித்திருக்க வேண்டும் என்கிற பாணியில் ட்வீட் செய்திருந்தார். அவர் தனது ட்வீட்டில், “நான் இந்திய வீரருக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்க அழுத்தம் கொடுத்திருப்பேன். இரண்டு பேர் என் நினைவில் இருக்கிறார்கள்.” என்று பதிவிட்டிருந்தார். அவர் குறிப்பிடுவது புவனேஸ்வர் குமார் மற்றும் மயங்க் அகர்வால் இருவரையும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Mohamed:

This website uses cookies.