ஒருநாள் போட்டிகளில் நான் எந்த பொசிஷனிலும் ஆடுவதற்கு தயார்; ‘அணியில் எடுங்க பிளீஸ்’ மூத்த இந்திய வீரர் பேட்டி!

ஒருநாள் போட்டிகளில் நான் எந்த பொசிஷனிலும் ஆடுவதற்கு தயார்; ‘அணியில் எடுங்க பிளீஸ்’ மூத்த இந்திய வீரர் பேட்டி!

ஒருநாள் போட்டிகளில் நான் எந்த இடத்திலும் ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன் என மூத்த இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே பேட்டியளித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் அஜிங்கிய ரஹானே, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் கடைசியாக 2018ம் ஆண்டு துவக்கத்தில் ஆடினார். அதன்பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுவிட்டார்.

ஒருநாள் போட்டிக்கான அணியில் துவக்க வீரராக களமிறங்கி வந்த ரஹானே, பிறகு நான்காவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஒரு சில போட்டிகளில் சோதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, ஓரிரு தொடர்களில் வெளியில் அமர்த்தப்பட்டு, பின்னர் ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

இவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நான்காவது இடத்திற்கான சரியான வீரரை தொடர்ந்து தேடி வருகிறது. அந்த இடத்தில் அம்பத்தி ராயுடு, ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் போன்றோர் பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தற்போது வரை அந்த இடம் யாருக்கு என உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் வருவது குறித்தும், எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் ஆடுவதற்கு தயார் என்றும் பேட்டியளித்துள்ளார் அஜிங்கிய ரஹானே. அவர் அளித்த பேட்டியில்,

“மீண்டும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு காத்திருக்கிறேன். அதற்காக என்னை முழுமையாக தயார் படுத்தி வருகிறேன் எந்த பொசிசனில் ஆடுவதற்கும் நான் தயாராக உள்ளேன். துவக்க வீரராக இருந்தாலும் சரி, நான்காவது வீரராக களம் இறங்கினாலும் சரி எதற்கும் தயாராக இருக்கிறேன். வாய்ப்பு வரும்வரை காத்திருப்பேன். ” என்றார்.

இந்திய அணிக்காக இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரஹானே, 2962 ரன்கள் எடுத்துள்ளார். அதில் துவக்க வீரராக களமிறங்கி 1937 ரன்களும், நான்காவது வீரராக களமிறங்கி 843 ரன்களும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மூன்று சதங்களும் அடங்கும்.

Prabhu Soundar:

This website uses cookies.