டி.20 உலகக்கோப்பை நடக்குமா..? இல்லையா..? நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான முக்கிய முடிவு நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி.20 உலகக்கோப்பையை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டிருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் முடியாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த வருடம் டி.20 உலகக்க்கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
டி.20 உலகக்கோப்பையை தள்ளி வைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ மிகப்பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் ஐ.சி.சியும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தது.
இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பை குறித்தான முக்கிய முடிவு நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
ஐ.சி.சி. உறுப்பினர்களின் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலககோப்பை போட்டி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்.
இந்தப் போட்டியை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்படலாம். அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. இதனால் இந்தப் போட்டி 2022 -ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.
உலக கோப்பை ஒத்தி வைக்கப்படும்போது அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் .20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருந்த ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.