உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இன்று அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அதில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
கரீபியன் நாட்டைச் சேர்ந்தவரான ஆல்ரவுண்டர் சோப்ரா ஆச்சர் அவரது தந்தையுடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து விட்டார். இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணிக்கு ஆட வேண்டும் என்றால் அந்நாட்டில் குறைந்தது மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து குடியுரிமை பெற்று இருக்க வேண்டும் என்பதே முதன்மையான தகுதி. சோப்ரா ஆச்சர் 2016 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி குடிபெயர்ந்தார். தற்போது 2019 மார்ச் 17 தேதியுடன் இந்த மூன்று ஆண்டுகள் முடிவடைந்து விட்டதால் இனி இங்கிலாந்து அணிக்கு ஆட தகுதி பெற்று விட்டார்
இதனால், உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதற்கட்ட 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப்பட்ட போது அதில் இவரது பெயர் இடம் பெறவில்லை.
உலக கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் ஒரு டி20 போட்டியிலும், பாகிஸ்தான் அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஆட இருக்கிறது. அந்த இரண்டு தொடருக்கும் இவரது பெயரை இங்கிலாந்து அணியில் தேர்வு குழு சேர்த்துள்ளது.
இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் ஸ்மித் கூறுகையில், ” கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜோப்ரா ஆர்ச்சரின் செயல்பாடுகளை நாங்கள் நன்கு கவனித்து வருகிறோம். உள்ளூர் போட்டிகளிலும் பலதரப்பட்ட நாட்டு டி20 தொடர்களிலும் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதற்காக, நேரடியாக அவரை எங்களால் எடுக்க இயலாது. பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து நிச்சயம் உலக கோப்பையில் இடம்பெறுவது ஒரு ஆலோசிப்போம்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி விவரங்கள்:
உலக கோப்பை இங்கிலாந்து அணி : ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், இயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளென்கட், அடில் ரஷீத், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் குர்ரான், ஜோ டென்லி, டேவிட் வில்லி
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி: ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், இயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளன்கெட், அடில் ரஷிட், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் குர்ரான், ஜோ டென்லி, டேவிட் வில்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான்
அயர்லாந்தின் ஒருநாள் மற்றும் பாகிஸ்தான் டி20 போட்டிக்கான அணி: இயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் பில்லிங்ஸ், டாம் குர்ரான், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்குட், அடில் ரஷிட், ஜோ ரூட், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்