சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து அதில் சிறந்த ஒரு வீரருக்கு விருது அளித்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரியில் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்த விருதை பெற்றார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்கான விருதை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பெற்று இருக்கிறார்.
பிப்ரவரி மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் அஸ்வின் 2வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இருக்கிறார். மேலும் அஸ்வின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் தனது 400 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து சாதனை படைத்திருக்கிறார்.
அஸ்வின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த மூன்று டெஸ்ட் போட்டியில் மொத்தம் 24 விக்கெட்களை வீழ்த்தி ஒரு சதத்துடன் இணைந்து 176 ரன்களை குவித்து அதிரடியாக விளையாடி இருப்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இவரைத் தேர்வு செய்தது. இவரைத்தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் போட்டியில் 218 ரன்கள் குவித்து இரட்டை சதம் விளாசினார். ரூட் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 333 ரன்கள் குவித்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதனால் ரூட்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரராக கைல் மேயர்ஸ் தனது முதல் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். எனவே இவரையும் ஐசிசி தேர்வு செய்தது.தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இவர்கள் மூவரில் சிறந்த வீரராக அஸ்வினை தேர்வு செய்து விருதை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இதற்கு முன் வழங்கப்பட்ட ஜனவரி மாதத்திற்கான விருதையும் இந்திய வீரரான பண்ட் தான் பெற்றிருக்கிறார். தற்போது பிப்ரவரி மாதத்திற்கான விருதையும் மீண்டும் இந்திய வீரரை பெற்றிருப்பதால் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.