டி.20 உலகக்கோப்பையும் தள்ளி போகிறது..? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கும், ஐரோப்பிய கால்பந்து ஆட்டமும் ஒரு ஆண்டுக்கும் தள்ளி வைக்கப்பட்டது.
இதேப்போல பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் ரத்தானது. இதேபோல பல போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 30-ந்தேதி வரை வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா வர தடைவிதித்துள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பையின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஆகஸ்ட் இறுதியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்கிறது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது;-
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் தற்போது இருண்ட நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது. மக்களின் உடல் நலமே எங்களுக்கு மிகவும் முக்கியம். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இப்போது எதுவும் சொல்ல முடியாது.
ஆகஸ்ட் இறுதியில் இது குறித்து ஐ.சி.சி. முடிவு செய்யும். ஆகஸ்ட் வரை எந்த முடிவும் எடுக்கமாட்டோம். திட்டமிட்ட தேதியில் போட்டியை நடத்துவதில்தான் நாங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.