சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது.
காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாட முடியாமல் தவித்து வந்த இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணியில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
காயம் காரணமாக நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடமல் இருந்த போதிலும், இந்திய அணிக்கான தனது பங்களிப்பை செய்ய புவனேஷ்வர் குமார் தவறவில்லை. ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த புவனேஷ்வர் குமார் 3 போட்டியிலும் 6 விக்கெட் வீழ்த்தினார். 29 ஓவரில் 174 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சராசரி 22.50 ஆகும்.
இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் புவனேஷ்வர் குமார் 9 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் டிரண்ட் பவுல்டே முதலிடத்தில் நீடிக்கிறார். 4வது இடத்தில் இந்திய அணியின் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் உள்ளார். பும்ராஹ்வை தவிர வேறு எந்த இந்திய வீரரும் முதல் 10 இடத்திற்குள் இல்லை.
2-வது போட்டியில் 99 ரன்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளார். பேர்ஸ்டோவ் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளார். இவர் 2-வது போட்டியில் 124 ரன்கள் விளாசினார்.\
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலியே முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2வது இடத்திலும், இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா 3வது இடத்திலும் உள்ளனர்.