12 வருடம் யாராலும் நெருங்க முடியாதது… விராட் கோலியை மிஞ்சிய நம்பிக்கை நாயகன் சுப்மன் கில்
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என அனைத்தையும் கைப்பற்றிய இந்திய அணி, சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த அணிகளுள் ஒன்றான நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்ததை போன்றே, இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமான சுப்மன் கில், முகமது சிராஜ் போன்ற வீரர்களும் தரவரிசையில் ஜெட் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.
தற்போதைய இந்திய ஒருநாள் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ள முகமது சிராஜ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளதை போன்று, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 360 ரன்கள் குவித்து அசத்திய சுப்மன் கில் தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏழாவது இடத்திலும் தனது 30 வது சதத்தை விளாசிய ரோகித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது எட்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். இதேபோன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய நியூசிலாந்து வீரர் டிவோன் கான்வே 13 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தில் இருக்கிறார்.
கிட்டத்தட்ட கடந்த 12 ஆண்டுகளில் இந்திய வீரர்கள் யாரும் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் விராட் கோலியை மிஞ்சியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.