கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஒருநாள் அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கடந்த பத்து ஆண்டுகால சிறந்த கிரிக்கெட் வீரருக்கான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தோனி, கோலி மற்றும் அஷ்வினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என சிறந்த வீரர்களை ஐசிசி அறிவிக்க உள்ளது.
அந்தவகையில், கடந்த ஆண்டுகளில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை தேர்வு செய்து, கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த ஒருநாள் ஆடும் லெவனையும் ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி தேர்வு செய்த டி.20 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்த தோனியே, ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராகவும் தோனியையே தேர்வு செய்துள்ளது ஐசிசி.
இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஆகியோரை துவக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள ஐசிசி, மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ளது.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஐசிசி, பந்துவீச்சாளர்கள் வரிசையில் மிட்செல் ஸ்டார்க், டிரண்ட் பவுல்ட், இம்ரான் தாஹிர் மற்றும் லசீத் மலிங்கா ஆகியோரை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
ஐசிசி தேர்வு செய்துள்ள ஒருநாள் போட்டிகளுக்கான ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிரண்ட் பவுல்ட் (நியூசிலாந்து), இம்ரான் தாஹிர் (தென் ஆப்ரிக்கா), லசீத் மலிங்கா (இலங்கை).