சர்வதேச டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், அடுத்தாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டி.20 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச டி.20 போட்டிகளுக்கான புதிய தவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது.
டி.20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த கே.எல் ராகுல் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே போல் இந்திய கேப்டன் கோலி 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கே.எல் ராகுல் மற்றும் கோலியை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் முதல் 10 இடங்களில் இல்லை.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான் முதலிடத்திலும், முஜிபுர் ரஹ்மான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் அடில் ரசீத் உள்ளார். இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.