இவர் பினிஷிங் ரோலில் நன்றாக விளையாடுவது அணிக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் பார்வையும் தற்போது அதை நோக்கித்தான் இருக்கிறது. நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி இந்த வருடம் உலக கோப்பையை நடத்துகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மேல்பர்ன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
அதேபோல் அக்டோபர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா அணி உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
மூன்று தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கீழ் வரிசையில் விளையாடி வருபவர் அனுபவமிக்க மேத்யூ வேட். கடைசி கட்டத்தில் களமிறங்கி தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்துகிறார். 200 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடி ரன் குவிக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு திருப்புமுனையாகவும் விளங்குகிறார். கடைசி கட்டத்தில் இறங்கி 20, 30 ரன்கள் அடிக்கும்பொழுது அணியின் ஸ்கோர் பலம்மிக்கதாக மாறுகிறது. ஆகையால் உலக கோப்பையில் இவர் ரோல் எப்படி இருக்கும்? ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை வெல்வதற்கு இவரது பேட்டிங் உதவுமா? என்கிற அடிப்படையில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பினிஷர் மற்றும் ஜாம்பவான் மைக்கேல் பெவன்.
அவர் கூறுகையில், “நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி பேலன்ஸான அணியாக இருக்கிறது. ஒரு சில வீரர்களை வெவ்வேறு மைதானங்களுக்கு ஏற்றாற்போல மாற்றி பயன்படுத்தலாம். சரியான போட்டிகளில் சரியான வீரர்களை தேர்வு செய்தால் நிச்சயம் கோப்பையை கைப்பற்றலாம். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
தற்போது இருக்கும் அணியில் மேத்யூ வேட் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பினிஷிங் ரோல் மிக நன்றாக இருக்கிறது. அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகிறார். நிச்சயம் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு திருப்புமுனையாக இவர் இருப்பார். கடினமான சூழலில் களமிறங்கி வெகுவாக ரன் குவித்து அணியின் அழுத்தத்தை முற்றிலுமாக குறைக்கிறார்.” என பெருமிதமாக பேசினார்.