இந்த வருடம் என்னுடைய கவனமெல்லாம் இதை நோக்கித்தான் இருக்கிறது என்று மனம்திறந்து பேசி இருக்கிறார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா.
டி20 உலக கோப்பை தொடரில், வருகிற 23ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியை ஜெயித்தால், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் மிகச்சிறப்பாக நல்ல மனநிலையுடன் விளையாடலாம். 2021 ஆம் ஆண்டு உலககோப்பையில் நடந்த தவறு இப்போதும் நடந்து விடக்கூடாது என்று இந்திய அணி நிர்வாகத்தின் மனதில் இருக்கும்.
ஆஸ்திரேலியா மைதானங்கள் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஒவ்வொரு அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் மீதும் தற்போது முழு கவனம் திரும்பி இருக்கிறது. அத்துடன் வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் இருக்கும் ஆல்ரவுண்டர்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. பேட்டிங்கில் அவர் வழக்கம் போல அபாரமாக சிக்ஸர்கள் பவுண்டரிகள் விளாசுகிறார். சமீபகாலமாக அவரது பந்துவீச்சும் நன்றாக இருக்கிறது. ஆசியகோப்பையில் நம்பிக்கை அளித்தார். இந்திய அணிக்கு இது கூடுதல் பலம் சேர்கிறது.
உலக கோப்பை குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “இந்த வருடம் உலககோப்பையில் எனது கவனம் முழுவதும் ஃபீல்டிங் நோக்கியே இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டாலும், ஃபீல்டிங்கில் பயங்கரமாக இருக்கும் அணியை எளிதாக வீழ்த்த இயலாது.
கடவுளின் கருணையால் எனது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டு, என்னால் இயல்பாக செயல்பட முடிகிறது. அதை முழுமையாக ஃபீல்டிங்கில் பயன்படுத்த உள்ளேன். இந்த வருடம் உலக கோப்பையில் கோப்பையை வெல்வதை இரண்டாவதாக கருதுகிறேன். முதன்மையாக அடுத்த போட்டியில் எவ்வாறு செயல்பட முடியும். ஃபீல்டிங்கில் எப்படி பங்களிப்பை கொடுக்க முடியும் என்று தொடர்ந்து யோசித்து வருகிறேன்.
மேலும் சிறப்பான மற்றும் கடினமான கேட்சுகளை எடுத்து, இந்த வருடத்திற்கான சிறந்த கேட்ச் என்று சொல்லும் அளவிற்கு எனது செயல்பாடு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆஸ்திரேலிய மைதானங்கள் மிகப்பெரியது நிறைய காலி இடங்கள் இருக்கும். பேட்ஸ்மேன்கள் அதை நன்றாக பயன்படுத்திக் கொள்வர். ஆகையால் ஃபீல்டிங்கில் மிகச்சிறப்பாக செயல்படும் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.” எனவும் குறிப்பிட்டார்.