டி20 உலக கோப்பையில் இவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம், இந்திய அணி இவரை மிகவும் மிஸ் செய்யும் என்று இந்திய வீரர் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார் டெல் ஸ்டெய்ன்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார். டி20 உலக கோப்பை தொடருக்கு ஒரு மாதம் முன்னரே அவருக்கு உடல் நலம் குணமாகியது. அதற்கு முன் இதே முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்றுவந்தார்.
மீண்டும் குணமடைந்து இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்தார். துரதிஷ்டவசமாக, தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக மீண்டும் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குணமடைவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும், அவரை டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்கு பரிந்துரைக்க முடியாது என தெரிவித்தனர். உடனடியாக டி20 உலக கோப்பை அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
முக்கியமான தொடரில் பும்ரா இடம்பெறாதது இந்திய அணிக்கு பிறந்த பின்னடைவை தந்திருக்கிறது. ஏற்கனவே டெத் ஓவரில் இந்திய அணியின் செயல்பாடு படுமோசமாக இருந்து வருகிறது. இந்த சமயத்தில் பும்ரா இல்லாதது கூடுதல் பின்னடைவாக இருக்கிறது.
பும்ரா விலகியது மற்றும் அதனால் இந்தியா எந்த அளவிற்கு அவரை மிஸ் செய்கிறது? என்பது பற்றி சமீபத்திய பேட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு லெஜன்ட் டெல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக யார் உள்ளே வந்தாலும் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. அவர்கள் முன்பு செயல்பட்டதை விட சில மடங்கு அதிகமாகவே செயல்பட வேண்டும். ஏனெனில் அவ்வளவு பெரிய இடத்தை நிரப்புவதற்கு முயல்கிறார்கள். நிச்சயம் பும்ரா போன்று மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து வரும் வீரரை இந்திய அணி உலக கோப்பையில் மிஸ் செய்யும். வரும் வீரர்கள் பும்ராவின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.” என அறிவுறுத்தினார்.
மேலும் இந்த வருடம் உலக கோப்பையை யார் வெல்வார்கள் என கேட்டபோது, “நிச்சயம் இந்த கேள்விக்கு பதில் அளிப்பது கடினம். பெரிய அணி சிறிய அணி என்று உலகக்கோப்பை போன்ற தொடரில் கூற முடியாது. சிறிய அணியும் முழு ஆக்ரோசத்துடன் செயல்பட்டு மிகப்பெரிய அணிகளை வீழ்த்தி இருப்பதை வரலாறு நமக்கு நிரூபித்திருக்கிறது.” என்றார்.