ஒரே ஓவரில் பும்ராவிற்கு மாற்றாக என்னை தேர்ந்தெடுத்தது மிகவும் சரி என நிரூபித்து இருக்கிறார் முகமது சமி என்று ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, முன்னதாக டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். துரதிஷ்டவசமாக தென்னாபிரிக்க டி20 தொடரின்போது முதுகு பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆகையால் அவரால் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது என்று மருத்துவ குழுவினர் அறிவித்தனர். அதன்பிறகு உலக கோப்பை தொடரிலிருந்து விலக்கப்பட்டார்.
பும்ராவிற்கு மாற்று வீரராக கடந்த வாரம் முகமது சமி அறிவிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு முகமது சமி சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மட்டுமே அவருக்கு இருந்தது. மேலும் கொரோனா தொற்றும் அவருக்கு வந்தது. உடனடியாக உடல் தகுதியை நிரூபித்து அணியில் இடம் பிடித்தார். இவர் எப்படி சரியான வீரராக இருப்பார்? ஓராண்டு காலம் சர்வதேச போட்டிகளில் விளையாடவே இல்லை! என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக முகமது சமிக்கு கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் மற்றும் இவரது ஓவரில் ஒரு ரன் அவுட் என மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். தனது வருகையை ஸ்டைலாக அறிவித்தார்.
இந்நிலையில் இவரது தேர்வு மிகச் சரி என பல்வேறு விமர்சனங்களும் பாராட்டுதலாக மாறியது. இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் முகமது சமியை பற்றி பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், “பும்ரா இந்திய அணியில் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். அவரைப் போன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர் நிச்சயம் அணிக்கு தேவை. அதே நேரம் முகமது சா₹மி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர். அவரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். தற்போது தன்னை தேர்வு செய்தது சரி என்றும் நிரூபித்திருக்கிறார். பும்ராவிற்கு சரியான மாற்று வீரராக தெரிகிறார்.” என பதிவிட்டு இருந்தார்.