“இந்திய மைதானத்தில் அடிக்கிறாரு. ஓகே..” ஆஸ்திரேலிய மைதானங்களில் சூரியகுமார் பேட்டிங் ஸ்டைல் எடுபடுமா? – டேல் ஸ்டெயின் விளக்கம்!

ஆஸ்திரேலிய மைதானங்களில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் மிகச் சிறப்பாக எடுபடும் என கணித்துள்ளார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்.

டி20 உலககோப்பை இந்திய அணியில் பேட்டிங் மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் இருவரின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த ஜோடி அணியின் வெற்றிக்கும் பங்களிப்பை கொடுத்தது.

ஓரிரு போட்டிகளில் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். இதனால் எளிதாக இந்திய அணியால் 180 ரன்களுக்கும் அதிகமாக அடிக்க முடிகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு 2வது டி20 போட்டியில் 237 ரன்கள் அடித்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் கவலைக்கிடமாக இருந்தது. சூரியகுமார் யாதவ் அணியில் இணைந்த பிறகு மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன் குவிக்க முடிகிறது. பவர்-பிளை ஓவர்களில் விக்கெட்டுகள் இழந்தாலும் எவ்வித தடங்கலும் இன்றி 200 ரன்களை எட்ட முடிகிறது.

இந்நிலையில் சூரியகுமாருடைய இதே ஃபார்ம் ஆஸ்திரேலியா மைதானங்களில் தொடருமா? அவரது பேட்டிங் ஸ்டைல் ஆஸ்திரேலியா மைதானங்களில் எடுபடுமா? என பேட்டி அளித்திருக்கிறார் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்துவீச்சு லெஜெண்ட் டேல் ஸ்டெயின்.

அவர் கூறுகையில், “சூரியகுமார் பேட்டிங் செய்யும்பொழுது பந்துவீச்சாளரின் வேகத்தை பயன்படுத்தி எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கிறார். மெதுவாக வரும் பந்தை ஸ்டம்பிற்கு பின்னே தள்ளி விடுகிறார். ஆஸ்திரேலிய மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த சமயம் இவரது பேட்டிங் ஸ்டைல் நன்றாக எடுபடும். மேலும் சிட்னி, மெல்பர்ன், பெர்த் போன்ற மைதானங்கள் சற்று பெரியதாக இருக்கும். சாதாரணமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதில் பௌண்டரிகளை சிக்ஸர்களாக மாற்ற முடியாது. ஆனால் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர் வேகத்தை நன்றாக பயன்படுத்துகிறார் என்பதால் எளிதாக எல்லையை கடந்து சிக்சர் அடிக்க முடியும்.

அவரது பேட்டிங்கை பார்க்கும் பொழுது எனக்கு ஏபி டி வில்லியர்ஸ் நினைவுக்கு வருகிறார். அவரைப் போன்று இவருக்கும் பந்து வீசுவது மிகவும் கடினம். எல்லா திசைகளுக்கும் வெவ்வேறு ஷாட்கள் வைத்திருக்கிறார். இந்திய அணிக்கு வரும் உலக கோப்பையில் மிக முக்கிய பங்களிப்பை கொடுப்பார் என என்னால் உணர முடிகிறது.” என்று புகழ்ந்தார்.

Mohamed:

This website uses cookies.