பும்ராவிற்கு மாற்றாக புதிய வேகப்பந்துவீச்சாளரை அறிவிக்க காலதாமதம் ஆவது ஏன்? என்று பேட்டியில் விளக்கம் அளித்து இருக்கிறார் ரோகித் சர்மா.
முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து பும்ரா விலகினார். அவருக்கு முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ அறிக்கை வருவதற்கு தாமதம் ஆனது. கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி திங்கட்கிழமை அன்று வெளிவந்த அறிக்கையில், காயம் சற்று தீவிரமாக இருக்கிறது. குணமடைவதற்கு இன்னும் சில காலம் தேவை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்து விட்டனர். ஆகையால் டி20 உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் டி20 உலக கோப்பையில், பும்ராவிற்கு மாற்று வீரராக முகம்மது சமி, தீபக் சஹர், முகமது சிராஜ் ஆகியோரில் ஒருவர் தான் இருப்பர் என்ற கணிப்புகளும் வெளிவர துவங்கிவிட்டன. மேலும் பும்ரா விலகுகிறார் என அறிவிப்பு வெளிவந்த அன்று ஏன் மாற்று வீரரை அறிவிக்கவில்லை? என்ற மற்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்றாவது டி20 போட்டி முடிவுற்றவுடன் பேட்டி அளித்த ரோஹித் சர்மா கூறுகையில், “தற்போது இருக்கும் இந்திய அணியில் வெகு சில வீரர்களே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். மற்றவர்கள் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய அனுபவத்தை ஏற்படுத்தவும் சில பயிற்சி போட்டிகளை ஆஸ்திரேலிய மைதானத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவர்களுடன் இன்னும் சில இளம் வேகப்பந்துவீச்சாளர்களும் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கின்றனர். அவர்களுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்ட பிறகு உரிய வீரரை தேர்ந்தெடுப்போம். அதற்கு சில காலம் தேவை. மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும். அனேகமாக அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளிவரும்.” என்று தனது பேட்டியில் ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருந்தார்.
ரிசர்வ் வீரர்கள் வரிசையில் தீபக் சகர் மற்றும் முகமது சமி இருவரும் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் எடுக்கப்படலாம். மேலும் இந்த அணியுடன் முகமது சிராஜ் பயணிக்கிறார். அவர் மட்டுமல்லாது சேத்தன் சக்கரியா, குல்தீப் சென் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோரும் பயணிக்கின்றனர். குறிப்பிட்ட வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மற்ற வீரர்கள் வலைப்பயிற்சியில் வந்து வீசுவதற்கு பயன்படுத்தப்படுவர் என்றும் தெரியவந்துள்ளது.