அவரை நினைத்து கவலை வேண்டாம்.. உலககோப்பையில் பின்னி பெடலெடுப்பார் – முக்கியமான இந்திய வீரர் பற்றி பேசிய மிச்செல் ஜான்சன்!

விராட் கோலி சரியான நேரத்தில் பார்மிற்கு வந்திருக்கிறார். இது இந்தியாவுக்கு நல்லது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் மிச்செல் ஜான்சன்.

ஆசியக் கோப்பை தொடரை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்தியா, ஆசிய கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. லீக் சுற்றில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மிகச்சிறப்பாக விளையாடியது. ஆனால் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளிடமும் கடைசி ஓவரில் தோல்வியை தழுவி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்த வருட ஆசிய கோப்பைத் தொடர் இந்திய அணிக்கு மறக்க கூடியதாக அமைந்துவிட்டது. ஆனால் விராட் கோலிக்கு இது மிகச் சிறப்பான தொடராக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கும் மேலாக சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது 71 வது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் தனது முதல் டி20 சதத்தையும் அடித்தார். 5 போட்டிகளில் 276 ரன்களை அடித்திருந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆகும். இரண்டு ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை தவறவிட்ட விராட் கோலி, மீண்டும் நல்ல பார்மிற்கு வந்திருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

மேலும் டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்குகிறது. அதற்குள் விராட் கோலி இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய அணிக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கிறது. இது குறித்து பலரும் பாராட்டுதலை தெரிவித்தனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் தனது சமீபத்திய பேட்டியில் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.

“தனது அணியின் மிக முக்கியமான வீரர் ரன்களை குவித்து வந்தால் அந்த அணிக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பலம் மிக்கதாகவும் இருக்கும். அந்த வகையில் விராட் கோலி மீண்டும் பார்மிற்கு வந்திருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சியை தரும். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்ற பிறகு, அணியின் கவனத்தையும் முற்றிலுமாக மாற்றி பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். தற்போது பேட்டிங்கில் அவர் அசத்தி வருவது இந்திய அணிக்கு பலத்தை கொடுத்திருக்கிறது.”

“இந்திய அணி நீண்ட நாட்களாக மிகப்பெரிய தொடரை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்த கடினமான சூழலில் நிச்சயம் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க வேண்டும். உலக கோப்பையில் களமிறங்குவது என்பது ஒவ்வொரு அணிக்கும் கூடுதல் பலத்தை தரும். அந்த வகையில் இந்திய அணி ஏற்கனவே பலத்துடன் காணப்படுவதால் இந்த தொடரை நிச்சயம் வென்றாக வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.