“இந்த பையனை மிஸ் பண்ணாம பிளேயிங் லெவன்ல வச்சிக்கோங்க..” பும்ரா இல்லாத குறையை தீர்ப்பார் – ரோகித் சர்மாவுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்!

அர்ஷதிப் சிங் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என ரோகித் சர்மாவிற்கு அறிவுரை கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணி பந்துவீச்சில் சமீப காலமாக பின்னடைவை சந்தித்து வரும்பொழுது, ஓரளவு ஆறுதலை தரக்கூடிய அளவில் இருப்பது இளம் வீரர் அர்ஷதீப் சிங்கின் பந்து வீச்சு. உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கடந்த ஜூலை மாதம் சர்வதேச போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அடுத்த இரண்டு மாதங்களிலேயே டி20 உலக கோப்பையில் இடம் பெற்று விளையாடும் அளவிற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் அர்ஷதீப் சிங். கேப்டன் ரோகித் சர்மாவும் அவர் மீது அதீத நம்பிக்கையை கொண்டிருக்கிறார் என்பது தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து வருவது மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் டெத் ஓவர்களில் நன்றாக செயல்பட்டு வருகிறார். பும்ரா போன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் இல்லாத போது இவரின் செயல்பாடு சற்று நம்பிக்கையை அளிக்கும் விதமாக இருக்கிறது.

அதேபோல் டெத் ஓவர்களுக்கென்று எடுக்கப்பட்ட ஹர்ஷல் பட்டேல் செயல்பட தவறும் பொழுது இவர் பக்க பலமாக இருந்து நம்பிக்கை அளிக்கிறார். டி20 போட்டியாக நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் அர்ஷதீப் சிங் செயல்பட்ட விதம் குறித்து ரோகித் சர்மாவும் பாராட்டியுள்ளார்.

தற்போது இளம் வீரரை பற்றி கிரிக்கெட்டுகளின் கடவுள் சச்சின் டெண்டுல்கரே பாராட்டி இருப்பது கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது. அவர் கூறுகையில், “அர்ஷதீப் சிங் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முழு ஈடுபாட்டுடன் செயல்படும் வீரராக இருக்கிறார். இளம் வீரருக்கு இருக்கும் பதட்டம் சற்றும் அவரிடம் இல்லை. தெளிவாக அணியின் கேப்டனிடம் என்ன தேவை என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுகிறார். ஒரு சில நேரங்களில் அவரே எடுக்கும் முடிவு நன்றாகவும் அமைந்திருக்கிறது.

தனக்கென்று திட்டம் வகுத்துக் கொண்டு, தனக்கு என்ன வரும்? என்ன வராது? என்பதை தெளிவாக புரிந்து கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் ஈடுபாட்டுடன் அவர் செயல்படுவது எதிர்காலத்திற்கு மிகச்சிறந்தது. அவ்வபோது வீரர்கள் காயம் அடைகிறார்கள். அதில் மட்டும் அவர் மிகத் தெளிவாக கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும். நல்ல எதிர்காலமும் அவருக்கு இருக்கிறது.” என்று சச்சின் டெண்டுல்கர் இளம் வீரரை பாராட்டினார்.

Mohamed:

This website uses cookies.