சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திடீரென சரிந்துள்ளார்.
அதேசமயம், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் எந்த மாற்றமில்லாமல் இருக்கின்றனர்
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் கேப்டன் கோலி எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாடாததால், தரவரிசையில் 673 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.
அதேசமயம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20தொடரில் இரு அரைசதங்கள் அடித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கோலியை 10-வது இடத்துக்குதள்ளி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
காயத்தால் அவதிப்பட்டு வரும் ரோஹித் சர்மா 11-வது இடத்தில் 662 புள்ளிகளுடன் உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான்வீரர் பாபர் ஆஸம் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 823 புள்ளிகளுடன் உள்ளார்
ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தை சமீபத்தில் இழந்த பும்ரா டி20 தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளார். பும்ராவுடன் மே.இ.தீவுகள் வீரர் ஷெல்டன் காட்ரெலும் இணைந்துள்ளார்
தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரிஸ் ஷம்ஸி 654 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கும், பெலுக்வே 658 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்
இங்கிலாந்து பந்துவீச்சாளர் டாம் கரன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் 30-வது இடத்துக்குள் இடம் பிடித்துள்ளார்.
இதுதவிர தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் 16-வது இடத்துக்கும், பவுமா52-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளார்கள். இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ 23-வது இடத்துக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் வான் டர் டூசன் 37-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்