புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; விராட் கோஹ்லியின் நிலை என்ன தெரியுமா..?
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஷஸ் தொடரை வெல்வதற்கு பந்துவீச்சில் கம்மின்ஸ், பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித்தும் முக்கியக் காரணங்களாக இருந்தனர்.
5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. கடந்த 1972-ம் ஆண்டுக்குப்பின் ஆஷஸ் தொடர் சமனில் முடிந்திருக்கிறது.
கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 80 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 23 ரன்களும் சேர்த்தார். இந்த டெஸ்ட் தொடர் தொடங்கும் போது 857 புள்ளிகளுடன் இருந்த ஸ்மித், தொடரில் 774 ரன்கள் சேர்த்து 937 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு வந்துவிட்டார்.
அதேபோல ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 57 புள்ளிகள் முன்னிலையுடன் தொடர்ந்து பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் காகிஸோ ரபாடாவும், 3-வது இடத்தில் இந்திய வீரர் பும்ராவும் உள்ளனர்
கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ வேட் சதம் அடித்ததன் மூலம் 32 இடங்கள் முன்னேறி 78-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டுக்குப்பின் மாத்யூ வாட் தரவரிசையில் உயர்வது இதுதான் முதல்முறையாகும்.
பந்துவீச்சாளர் மிட்ஷெல் மார்ஷ் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 20 இடங்கள் முன்னேறி 54-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மிகமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 7 இடங்களை இழந்து, 24-வது இடத்துக்கு சரிந்துவிட்டார். மொத்தம் 10 இன்னிங்ஸ்களில் வார்னர் 95 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பந்துவீச்சாளர் தரவரிசையில் 40-வது இடத்துக்கும், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சாம் கரண் 65-வது இடத்துக்கும்முன்னேறியுள்ளனர்.
இதேபோல ஜோஸ் பட்லர் முதல் 30 இடங்களுக்குள் இந்த ஆண்டில் முதல்முறையாக இடம் பிடித்துள்ளார். ஜோ டென்லி 94 ரன்கள் சேர்த்தன் மூலம் தரவரிசையில் 57-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.