கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கடந்த பத்து ஆண்டுகால சிறந்த கிரிக்கெட் வீரருக்கான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தோனி, கோலி மற்றும் அஷ்வினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என சிறந்த வீரர்களை ஐசிசி அறிவிக்க உள்ளது.
அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை தேர்வு செய்து, சிறந்த டெஸ்ட் அணியையும் அறிவித்துள்ளது ஐசிசி.
ஐசிசி தேர்வு செய்துள்ள டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்திய அணியின் விராட் கோலியே நியமிக்கப்பட்டுள்ளார். துவக்க வீரர்களாக முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெய்ஸ்டர் குக்கையும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரையும் தேர்வு செய்துள்ள ஐசிசி, மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன், விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. விக்கெட் கீப்பராக முன்னாள் இலங்கை வீரர் குமார சங்ககாராவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஐசிசி, பந்துவீச்சாளர்கள் வரிசையில் டேல் ஸ்டைன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ளது.
ஐசிசி தேர்வு செய்துள்ள சிறந்த டெஸ்ட் அணி;
அலெய்ஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், குமார சங்ககாரா, பென் ஸ்டோக்ஸ், ரவிச்சந்திர அஸ்வின், டேல் ஸ்டைன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.