சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது “சூ சின்” முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக கூறினார்.

டிரம்ப் குறிப்பிட்ட “சூ சின்” வேறு யாருமல்ல.. சச்சின் டெண்டுல்கர் தான். இந்திய பெயர்கள் பலவற்றை உச்சரிக்க டிரம்ப் மிகவும் சிரமப்பட்டார்.

அந்த வகையில் சச்சின் பெயரும் அதில் சிக்கிக் கொண்டது. மிகப் பெரும் கிரிக்கெட் நட்சத்திரத்தின் பெயரை டிரம்ப் தவறாக உச்சரித்த செய்தி கிரிக்கெட் ஆடும் நாடுகளில் எல்லாம் வேகமாக பரவி வருகிறது.

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட மத்திய அரசு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்தது.

இந்தியா வந்திறங்கிய அமெரிக்க அதிபரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கட்டி அணைத்து வரவேற்றார். பின் இருவரும் மகாத்மா காந்தியின் ஆசிரமமான சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கே சென்ற பின், இருவரும் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றனர்.

அங்கே, “நமஸ்தே டிரம்ப்” என்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் டிரம்ப் உரை ஆற்றினார். அப்போது அவர் அங்கே கூடி இருந்த மக்களின் கைதட்டல்களை அள்ளினார். அவர் பேசிய ஒவ்வொரு விஷயத்திலும் இந்தியர்களை ஈர்க்கும் செய்திகளை, பிரபலங்களை பயன்படுத்தினார்.

சுமார் ஒரு லட்சம் இந்தியர்கள் கூடி இருந்த அந்த மைதானத்தில் சுவாமி விவேகானந்தர், ஷாரூக்கான் என பலரின் பெயரை சொல்லி கைதட்டல்களை வாங்கிய டிரம்ப் அடுத்து, இந்தியாவின் இரண்டு மிகப் பெரும் பேட்ஸ்மேன்களின் பெயர்களை கூறினார்.

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களான சூ சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்றோர் இந்த நாட்டில் தான் இருக்கிறார்கள் என்றார் டிரம்ப். அப்போது கூட்டத்தினர் பெரிய அளவில் ஆரவாரம் செய்தனர். ஆனால், அவர் சச்சின் பெயரை தவறாக உச்சரித்ததும் பலரின் கவனத்துக்கு வந்தது.

பலரும் டிரம்ப் உச்சரிப்பை கேலி செய்தனர். பல நாடுகளிலும் இந்த செய்தி வேகமாக பரவியது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி சூ சின் பற்றி யாருக்காவது தெரியுமா? என கேள்வி கேட்டு ட்விட்டரில் அதகளம் செய்தது.மேலும், சச்சின் பெயரை தன் இணைய தளத்தில் சூ சின் என மாற்றி விட்டதாக ஒரு போலி வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் டிரம்ப், சச்சின் டெண்டுல்கர் என இருவரையும் மோசமாக கிண்டல் செய்து இருந்தது ஐசிசி.

டிரம்ப் பெயரை தவறாக உச்சரித்தது ரசிக்கும் படி இருந்தது. அதை சர்வதேச அமைப்பான ஐசிசி கிண்டல் செய்யும் என நினைக்கவே இல்லை என ஒருவர் கூறி உள்ளார். குறைந்த பட்சம் டிரம்ப் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் பெயரையாவது சொன்னாரே என சிலர் கூறி உள்ளனர்.

உண்மையில் சூ சின் யார் தெரியுமா? வட கொரியா கிரிக்கெட் அணியின் கேப்டன் பெயர் தானாம் இந்த சூ சின். டிரம்ப் ஏன் வட கொரியா கிரிக்கெட் வீரர் பெயரை எல்லாம் சொல்றாரு? என சிலர் அதையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

Sathish Kumar:

This website uses cookies.