சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்திய மகளிர் படை..? நாளை இறுதி போட்டி !!

MELBOURNE, AUSTRALIA - MARCH 07: Meg Lanning of Australia and Harmanpreet Kaur of India pose with the trophy during the 2020 ICC Women's T20 World Cup Media Opportunity at Melbourne Cricket Ground on March 07, 2020 in Melbourne, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்திய மகளிர் படை..? நாளை இறுதி போட்டி

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியுடன் நாளை மோத உள்ளது.

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. 3-ந்தேதியுடன் ‘லீக் ‘ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும், ‘பி ‘பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் லீக் முடிவில் வெளியேறின.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோத வேண்டிய முதல் அரைஇறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. ‘லீக்‘ சுற்றில் முதல் இடத்தைப் பிடித்ததால் இந்தியா முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியா 5 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நாளை (8-ந்தேதி) நடக்கிறது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த போட்டி தொடரில் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. ‘லீக்‘ சுற்றில் 4 ஆட்டங்களிலும் வென்று முத்திரை பதித்தது. ஆஸ்திரேலியாவை 17 ரன்னிலும், வங்காளதேசத்தை 18 ரன்னிலும், நியூசிலாந்தை 3 ரன்னிலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

ஆஸ்திரேலியாவை ஏற்கனவே தோற்கடித்து இருந்ததால் இறுதிப்போட்டியில் நம்பிக்கையுடன் ஆடும்.

‌ஷபாலி வர்மாவின் பேட்டிங்கையும், சுழற்பந்து வீச்சையும் பொறுத்து இந்தியாவின் உலக கோப்பை நிலை இருக்கிறது.

உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ‌ஷபாலி வர்மா 4 ஆட்டத்தில் 161 ரன் எடுத்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் ஆகியோரும் சிறப்பாக விளையாடுபவர்கள்.

பந்து வீச்சில் பூனம் யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் 9 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதேப்போல ஷிகா பாண்டே (7விக்கெட்), ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்து 5-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ந்து 6-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது.

மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி (181 ரன்), அலைஷா ஹீலே (161), மெகன் ஸ்கட் (9 விக்கெட்), ஜோனசென் (7) போன்ற சிறந்த வீராங்கனைகள் உள்ளனர்.

நாளைய இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.