சில வாரங்களுக்கு முன்பு உலகக்கோப்பை போட்டிக்கென பிரத்தியேக ஜெர்சியை வெளியிட்டது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம். அது சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் எதிரொலியாக தற்போது புது ஜெர்சியை வடிவமைத்து வெளியிட்டுள்ளது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்.
ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவான உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தங்களது அணியை அறிவித்து வருகின்றன.
மே மாதம் 30ஆம் தேதி துவங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சென்ற வாரம் அறிவித்தது.
கிரிக்கெட் உலகின் வல்லரசை (சாம்பியன்) தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அனைவரின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வங்கதேச அணியும் இம்முறை சொந்த மண்ணில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் வேஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை வீழ்த்தி பலத்துடன் உள்ளதால் உலகக்கோப்பையில் அதை தொடர காத்திருக்கிறது.
வீரர்களை அறிவித்த அதே நேரத்தில் உலகக்கோப்பைக்காக தனி ஜெர்சியை வடிவமைத்து வெளியிட்டது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம். ஆனால், இதனை ரசிகர்கள் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்தனர்.
உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் முன்பாகவே ரசிகர்களின் இந்த விமர்சனத்தை நேர்மறையாக ஏற்றுக்கொண்டு, அடுத்த நாளே வேறொரு ஜெர்சியை விரைவில் மாற்றி வடிவமைத்து வெளியிடுவோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
அதேபோலவே, நேற்று புதிய ஜெர்சியை வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதனை மிர்பூரில் உள்ள மைதானத்தில் அனைவரின் முன்னிலையில் வீரர்கள் அணிந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தனர். இதற்க்கு ரசிகர்கள் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
.
.