இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு மிக அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதின் நயிப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் இன்றைய நிலவரப்படி (ஜூன் 22-ம் தேதி வரை), 27 போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. இதில் இந்திய அணி நான்கு போட்டிகளில் ஆடியுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றது.
அதே நேரம் நியூசிலாந்து அணிக்கு எதிரான நடக்கவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து பெற்றதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டு 7 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடம் வகித்து வருகிறது. இதனையடுத்து ஜூன் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதே நேரம் இந்திய அணி ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவவில்லை.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முன்னேற மிகவும் உதவியாக இருக்கும் அதேநேரம் அரையிறுதிச் சுற்றுக்கு நுழையவும் எளிதாக உதவும்.
இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதின் நயிப் கூறியதாவது, “உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. இந்த உலக கோப்பையை வெல்வதற்கு மிக அதிக வாய்ப்புகள் கொண்ட அணியாகவும் இந்தியா இருக்கின்றது. அவர்களை எதிர்கொள்வது ஆப்கானிஸ்தான் போன்ற வளர்ந்துவரும் அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். இருப்பினும், உலகின் தலைசிறந்த 10 அணிகளுள் ஆப்கானிஸ்தான் அணியும் ஒன்று என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கடும் சவாலாக திகழ்வோம் என்றார்.