காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்விற்கு முழுக்குப் போட்ட ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹமித் ஹாசன் சோகத்துடன் உலக கோப்பையில் இருந்து விடைபெற்றார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த உலக கோப்பை தொடர் மிக மோசமாக அமைந்தாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற முன்னோடியான அணிகளை எளிதில் வெல்ல விடாமல் திணறடித்தது. இந்திய அணியை இறுதி ஓவர் வரை எடுத்துச் சென்று பதைபதைக்கச் செய்தது. பின்னர் முகமது சமியின் அற்புதமான ஹாட்ரிக் விக்கெட்டால் இந்திய அணி நிம்மதி பெருமூச்சுடன் வென்றது. அதேபோல் பாகிஸ்தான் அணியையும் ஏறக்குறைய வென்று விட்டது என நினைத்த நிலையில் அணியின் கேப்டன் நைப் வீசிய மோசமான ஓவரினால் ஆட்டம் பாகிஸ்தான் வசம் திரும்பியது. அதேபோல் வங்கதேச அணியிடமும் சற்று தட்டுத் தடுமாறிய தோல்வியைத் தழுவியது.
இப்படி ஒட்டுமொத்தமாக, எதிர்பார்த்ததை விட நன்றாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு அதன் பந்துவீச்சாளர்கள் நன்றாக உதவினர். ஹமீத் ஹாசனுக்கு இந்த உலக கோப்பை சரியாக அமையவில்லை என்றாலும் நன்றாக ரன்களை கட்டுப்படுத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசுகையில் அவரின் தொடைப் பகுதியில் நரம்பு கிழிந்தது. இதனால் போட்டியில் நடுவிலேயே வெளியேறினார். மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட அவர் குணமாக குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என தெரிவித்தனர். இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆட போவதில்லை என தெரிவித்தார். அதேநேரம் குணமடைந்து வந்த பிறகு டி20 போட்டிகளில் தொடர விருப்பம் இருப்பதாகவும் கூறினார்.
இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஹமீத் ஹாசன் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு முறை 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரின் சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது.