உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் மிக மோசமான வரலாற்றுச் சாதனையை ஒருநாள் அரங்கில் இந்திய அணி படைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு தோல்வியை தழுவிராத அணியாக திகழ்ந்து வந்தது. இதற்கு இங்கிலாந்து அணி தற்போது முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்குப் பிறகு, 7 லீக் போட்டிகளில் ஆடிய இந்திய அணி ஐந்து வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து என மொத்தம் 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்த தோல்வி இந்திய அணிக்கு மிக மோசமான சாதனை ஒன்றை பெற்றுத் தந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் ஆடி வரும் இந்திய அணி இதுவரை 972 ஒருநாள் போட்டிகளை சந்தித்துள்ளது. அதில் 515 போட்டிகள் வெற்றியிலும் 418 போட்டிகள் தோல்வியிலும் முடிந்துள்ளது. மீதமுள்ள 40 போட்டிகள் எவ்வித முடிவும் இல்லாமல் போனது.
ஒருநாள் போட்டிகளில் 418 தோல்விகளுடன், அதிகமுறை தோல்வியை தழுவியுள்ள அணி என்கிற இலங்கை அணியின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளது இந்தியா.
இந்திய அணியின் வெற்றி சதவீதம் 54.66%. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு பிறகு பெற்ற அதிகபட்ச வெற்றியாகும். அதாவது, மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் நாளை (ஜூலை 2) பங்களாதேஷ் அணியையும், ஜூலை 6ஆம் தேதி இலங்கை அணியையும் சந்திக்க இருக்கிறது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா அரையிருதிக்குள் நுழையும்.