பும்ராவின் இன்றைய கடைசி 5 ஓவர்கள் எந்த ஒரு வீரருக்கும் ரசிகருக்கும் பார்க்க ஒரு ட்ரீட்டாக அமைத்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் மோதின.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பாரிஸ்டோவ் 111 ரன்களும், ராய் 66 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும், ஜோ ரூட் 44 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 337 ரன்கள் எடுத்தது.
அதன்பிறகு களமிறங்கிய கேஎல் ராகுல் ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து அணிக்கு நம்பிக்கை அளித்தனர். துரதிஷ்டவசமாக 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு பண்ட் உடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார். ஆனால் சதம் அடித்த மறுகணமே ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 306 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி ஆடிய வேகத்திற்கு 380 ரன்கள் வரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து சமி மற்றும் பும்ராஹ் இருவரும் ரன்களை கட்டுப்படுத்தினர். குறிப்பாக பும்ராஹ் கடைசி 5 டெத் ஓவர்கள் மிக சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் பும்ராஹ் இப்படி நிகழ்த்துவது உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என காட்டுகிறது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறினார்.