உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள ரிஷப் பண்ட் ஆட இருப்பதாக கிரிக்கெட் வட்டார செய்திகள் வெளியாகின்றன.
ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியையும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி இருந்தது. மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருந்த நிலையில், மழையின் காரணமாக போட்டி ரத்து ஆகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்திய அணி, 89 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பெற்று உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர் வெற்றி சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தற்போது 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக ஜூன் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோதுகிறது.
ரிஷப் பண்ட் களமிறக்கம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் அடித்த ஷிகர் தவான், கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதற்கு அடுத்த போட்டியில் வெளியில் அமர்த்தப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு பதிலாக கே எல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி, 4வது இடத்திற்கு விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில், ஷிகர் தவானுக்கு குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது ஓய்வு அளிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி குணமடைந்த பிறகு விரைவில் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குணமடைய மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் தாமாக முன்வந்து உலக கோப்பை தொடரில் இருந்து விலகிக்கொள்வதாக ஷிகர் தவான் அதிரடி முடிவை அறிவித்தார். இதனால் ரிசர்வ் வரிசையிலிருந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் உடனடியாக தவானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய விஜய்சங்கர் பந்துவீச்சில் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்ததால் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வலைப் பயிற்சியின் போது பும்ரா வீசிய பந்து விஜய் சங்கரின் நுனி கால் பகுதியில் பட்டு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் களமிறங்கினால் மேலும் அதிகமாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், விஜய் சங்கர் க்கு பதிலாக ரிஷப் பண்டிற்கு பிளேயிங் லெவனில் ஆட வாய்ப்பு கொடுக்கப்பட இருப்பதாக இந்திய அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.